சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jul 2015

உங்கள் பர்ஸுக்குள் ஒரு வில்லன்! எம்.ஆர்.பி மோசடி

'வாடிக்கையாளர் என்பவர் நம் கடைக்கு வரும் மிக முக்கியமான நபர். அவர் நம்மை நம்பி அல்ல... அவரை நம்பித்தான் நாம் இருக்கிறோம்’ என்பது காந்திஜி சொன்ன புகழ்பெற்ற வாசகம். பல கடைகளில் இதை எழுதி அட்டையில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால், பின்பற்றுவோரின் எண்ணிக்கைதான் குறைந்துவிட்டது. 'லாபம்தான் நியாயம்’ என்றாகிவிட்ட நவீன உலகில், பொருட்களை உற்பத்திவிலையைவிட பல மடங்கு லாபம் வைத்து விற்கிறார்கள். அடக்க விலைக்கும், விற்பனை விலைக்குமான வித்தியாசம் பிரமாண்டமானதாக இருக்கிறது. 100 ரூபாய்க்கு நாம் வாங்கும் ஒரு மருந்துப்பொருளின் அடக்க விலை 10 ரூபாய்க்கும் கீழ். 20 ரூபாய்க்கு நம்மிடம் விற்கப்படும் குளிர்பானத்தின் அடக்க விலை ஐந்து ரூபாய்க்கும் குறைவு.
பேருந்து நிலையங்கள், மோட்டல்கள், சுற்றுலாத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், மல்ட்டிபிளெக்ஸ்கள்... போன்ற இடங்களில் அநியாயக் கொள்ளை அடிக்கிறார்கள். ஒரு சிப்ஸ் பாக்கெட் 15 ரூபாய் என அதில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும், 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். 20 ரூபாய் தண்ணீர் பாட்டில்  25 ரூபாய். குடும்பத்துடன் அவசரமாக பேருந்து ஏற வரும் ஒருவர், ஐந்து ரூபாய்க்காக பையைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையத்தைவிட்டு வெளியில் போக முடியுமா? 'சரி போய்த் தொலையுது’ எனக் கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. நமக்கு அது ஐந்து ரூபாய். ஆனால், ஒரு கடைக்காரர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 பேரிடம் இப்படி விற்றால் அவருக்குக் கிடைப்பது 2,500 ரூபாய். ஒரு மாதத்துக்கு 75 ஆயிரம் ரூபாய். கோயம்பேடு மாதிரியான பிரமாண்டமான பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் இருக்கின்றன. எனில் இந்த வகையில் ஒவ்வொரு நாளும் அங்கு சம்பாதிக்கப்படும் பணம் பிரமாண்டமானது. தமிழ்நாடு முழுக்க இதைக் கணக்கிட்டால், ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் பணம் இப்படி அநியாய லாபமாக பிடுங்கப்படுகிறது.

இந்த விஷயத்தில், 'மோட்டல்கள்’ எனப்படும் தொலைதூரப் பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்கள் மிகக் கொடுமையானவை. நம் ஒவ்வொருவருக்குமே மோட்டல்கள் குறித்த  கசப்பான ஓர் அனுபவம் இருக்கும். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை மனசாட்சியே இல்லாமல் 30 ரூபாய்க்கு விற்கின்றனர். இத்தனைக்கும் அந்தத் தண்ணீர் பாட்டில் பிராண்டட்கூட இல்லை. புளித்த மாவு தோசை 50 ரூபாய், வேகாத பரோட்டா 30 ரூபாய் என காரம் இல்லாமலேயே வயிற்று எரிச்சல் வரவைக்கிறார்கள். ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் மாதிரியான சுற்றுலாத் தலங்களிலும் இப்படி அநியாய விலை விற்கப்படுவது சர்வசாதாரணம்.
பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதன் மீது, அதன் 'அதிகபட்ச சில்லறை விற்பனை விலை’ (Maximum Retail Price-MRP) குறிப்பிடப்பட்டிருக்கும்; 'குறிப்பிட வேண்டும்’ என்பது விதி. அதை மீறி ஒரு பைசாகூட அதிக விலைவைத்து விற்கக் கூடாது. இது சட்டம் என்றபோதிலும் பல இடங்களில் இந்த விதியை மீறிதான் விற்கிறார்கள்.
இதற்கு என்ன செய்வது?
'சிவிக்ஸ்’ என்ற நுகர்வோர் அமைப்பை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த சரோஜாவிடம் பேசியபோது, ''எந்த ஒரு பொருளாக இருந்தாலும் பில் வாங்க வேண்டும். பேருந்து நிலையமாக இருந்தாலும், பெட்டிக் கடையாக இருந்தாலும் வாங்கும் பொருளுக்கு எவ்வளவு பணம் தருகிறீர்களோ, அதைக் குறிப்பிட்டு பில் வாங்குவது அவசியம். ஒருவேளை எம்.ஆர்.பி-யைவிட அதிகமான தொகைக்கு பில் போட்டிருந்தால், நிச்சயம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதி பெற முடியும்'' என்கிறார்.
நெல்லையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்மணி பவுடர் டப்பா ஒன்றை வாங்கி வந்தார். அதன் மீது 112 ரூபாய் என விலை எழுதப்பட்டிருந்தது. ஸ்டிக்கரைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே 93 ரூபாய் என இருந்தது. தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்ததும், வக்கீலான தனது கணவருடன் சென்று மீதி 19 ரூபாயைக் கேட்டார். அவர்கள் தர மறுத்துவிட்டனர். பிறகு இவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் சென்று அங்கு 5,000 ரூபாய் நஷ்டஈடு பெற்றார்கள். இதுபோல பல நுகர்வோர் வழக்குகளில் மக்கள் வெற்றிபெற்ற கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மையத்திலேயே இந்த வழக்கைத் தொடுக்க முடியும். வழக்கு செலவுகூட அதிகம் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் வரையில் நஷ்டஈடு கோரும் வழக்குகளுக்கு 100 ரூபாய்தான் கட்டணம். இப்படி வழக்கு போடுவதற்கு வாங்கிய பொருளுக்கு பில் இருக்க வேண்டும் என்பது மிக, மிக அடிப்படையானது; அவசியமானது.
ஆனால் ஒரு ரயில் பயணத்திலோ, ஒரு பேருந்து பயணத்திலோ அல்லது ஒரு சுற்றுலாத் தலத்தின் பெட்டிக் கடையிலோ பிஸ்கட் பாக்கெட் வாங்கிவிட்டு பில் வாங்க முடியுமா? ''வேறு வழி இல்லை. ஒரு நுகர்வோராக நீங்கள் ஏமாற்றப்படக் கூடாது என நினைத்தால், பில் வாங்கித்தான் ஆக வேண்டும். பல இடங்களில் பில் தர மறுப்பார்கள். முறைத்துவிட்டு 'வேற கடையைப் பாருங்க’ என்பார்கள். அப்போது அந்தக் கடையின் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் சட்ட அளவியல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு (Controller of Legal Metrology -Weights & Measures, DMS Compound, Teynampet, Chennai. Ph: 044-24321438)  புகார் செய்யலாம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்'' என்கிறார் சரோஜா.
இங்கு முக்கியமாக இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இப்போது ஏராளமான மல்ட்டிபிளெக்ஸ்கள் வந்துவிட்டன. சினிமா தியேட்டர்கள், உணவகங்கள், துணிக் கடைகள் என பலவிதமான கடைகள் இருக்கும் இந்த இடங்களில் அனைத்து பொருட்களுமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிக விலைவைத்து விற்கப்படுகின்றன. சரவணபவனில் ஒரு காபி 25 ரூபாய் என்றால், இங்கே ஒரு காபி 70 ரூபாய். சோளப்பொறி வெளியில் 25 ரூபாய், இங்கே 80 ரூபாய். அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை வெளியில் 12 ரூபாய் என்றால், இங்கே 30 ரூபாய். எல்லாமே இரு மடங்கு, மூன்று மடங்கு. அனைத்துக்கும் பில் தருகின்றனர். இதை எப்படி எடுத்துக்கொள்வது?
''அந்த இடத்தின் நில மதிப்பு, உள் கட்டுமான வசதிகள் இவற்றைக் கணக்கிட்டு, அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பில் கொடுத்துவிடுவதால் உரிய வரிகள் அரசுக்குச் செலுத்தப்பட்டுவிடும் என்று நம்பலாம்'' என்கிறார் பொருளாதார நிபுணர் சீனிவாசன். எனில், ஒரு பொருளின் எம்.ஆர்.பி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? அதை முடிவுசெய்வது யார்?
''இந்தியாவைப் பொறுத்தவரை எம்.ஆர்.பி-யை முடிவுசெய்வது உற்பத்தியாளர்கள்தான். அவர் சொல்லும் எம்.ஆர்.பி நியாயமானதுதானா என்பதை ஆய்வுசெய்து அங்கீகரிக்க தனி அரசுத் துறை எதுவும் இல்லை. உற்பத்தியாளர் தனது செலவுகளைக் கணக்கிட்டு, போக்குவரத்து, விநியோகஸ்தர் கமிஷன் என பல விஷயங்களையும் இணைத்து விலை முடிவுசெய்கிறார். அதுதான் இறுதியானது. நவீன காலத்தில் சந்தைப் போட்டியே ஒரு பொருளின் விலையைத் தீர்மானிக்கிறது. எல்லா பொருட்களிலும் போட்டியாளர்கள் அதிகம் என்பதால் மிக அதிக லாபம் வைத்து எந்த ஒரு பொருளையும் விற்க முடியாது'' என்கிறார் சீனிவாசன்.
உற்பத்தியாளர்தான் விலை நிர்ணயிக்கிறார் என்ற நிலையில், ஒரே நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் பெட்டிக் கடையில் ஒரு விலையும், மல்ட்டிபிளெக்ஸில் ஒரு விலையும் விற்கப்படுவது ஏன்?
''இது இப்போது நடந்துவரும் பெரிய மோசடி. நீங்கள் விலை அதிகம் கொடுத்து மல்ட்டிபிளெக்ஸில் வாங்கும் ஒரு பொருளின் விலையைப் பார்த்தால் அதன் எம்.ஆர்.பி அதிகமாக அச்சிடப்பட்டிருக்கும். அதே பொருளை வெளியில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும். என்ன விஷயம் எனில், பொருளின் விலையை நிர்ணயிப்பது உற்பத்தியாளர்தான் என்பதால், அவர்கள் இப்படி இரு விலை நிர்ணயிக்கின்றனர். உள்கட்டமைப்பு வசதி, நிலமதிப்பு இவற்றைக் காரணம் காட்டினாலும்கூட ஒரே பொருளுக்கு இரு விலை நிர்ணயிப்பது நுகர்வோரை ஏமாற்றும் வேலை. கர்நாடகாவில் இது தொடர்பான வழக்கு ஒன்று நடந்துவருகிறது'' என்கிறார் சரோஜா.

ஆக, ஒரு பொருளை எம்.ஆர்.பி-யின்படி விற்க வேண்டும் என்பது மிகவும் நியாயமான கோரிக்கையாக இருந்தாலும், அந்த எம்.ஆர்.பி நிர்ணயிக்கப்படுவதில் எந்தக் கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லை. 'இந்தப் பொருளின் எம்.ஆர்.பி நியாயமற்றது. இதன் விலையைக் குறைக்க வேண்டும்’ என உத்தரவிடும் எந்த அதிகாரமும் அரசிடம் இல்லை; அப்படி ஓர் ஏற்பாடுகூட இல்லை. 'சந்தைப் போட்டியே ஒரு பொருளின் விலையை நியாயமானதாக வைத்திருக்கும்’ என்றால், பேருந்து நிலையத்தில் மண்டும் கூட்டத்துக்கு எம்.ஆர்.பி விலையைவிட குறைத்து அல்லவா விற்க வேண்டும்? இந்தப் பின்னணியில் வைத்துப்பார்க்கும்போது முதலில் எம்.ஆர்.பி-யை வரைமுறைப்படுத்தும் செயல்திட்டம்தான் அரசின் முதல் தேவை. அப்படி அல்லாமல் 'எம்.ஆர்.பி-படிதான் பொருட்களை விற்க வேண்டும்’ எனச் சொன்னால், 'ஓ.கே சூப்பர்’ எனச் சொல்லிவிட்டு விலையை மாற்றி நிர்ணயித்து விற்கத் தொடங்கிவிடுவார்கள். யாரும் எதுவும் செய்ய முடியாது.
மல்ட்டிபிளெக்ஸ்களின் கூடுதல் விலைக்கு சொல்லப்படும் 'நிலமதிப்பு, வசதி அதிகம், அதனால் விலை அதிகம்’ என்ற இதே காரணத்தை பேருந்து நிலையக் கடைக்காரர்கள் வேறுமாதிரி சொல்கின்றனர். ''பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் ஒரு கடையை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால், அதற்கு பெருந்தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. முன்பணம், வாடகை என்பதை எல்லாம் தாண்டி பல இடங்களில் லஞ்சமும் தர வேண்டியிருக்கிறது. இவற்றை ஈடுகட்டவே நாங்கள் ஓரிரு ரூபாய்கள் கூடுதலாக விலை வைக்கிறோம்'' என்கிறார்கள். ஆனால் இது நியாயமற்ற வாதம். வார்டு செயலாளர் முதல் செயற்பொறியாளர் வரை அரசியல் - அதிகார மட்டங்களில் லஞ்சம் பாய்ந்தால்தான் இதுபோன்ற முக்கிய இடங்களில் கடை கிடைக்கும் என்பது நடைமுறை யதார்த்தம். அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ஆளரவமற்ற பிரதேசத்தில் இருக்கும் மோட்டலில் அநியாய விலை விற்கப்படுவதற்கு, இதுபோன்ற காரணத்தைக்கூடச் சொல்ல முடியாது. அங்கு நடப்பது பச்சையான பகல் கொள்ளை; பணம் பிடுங்கும் இரவுக் கொள்ளை!

 இவர்கள் எல்லாம் யார்?
'ஒரு பொருளை உற்பத்திசெய்பவரே விலை நிர்ணயிக்கலாம்’ என்கிறார்கள். ஆனால், தஞ்சாவூரில் விளைந்த அரிசிக்கு விலை நிர்ணயிப்பது யார்? தேனியில் விளைந்த காய்கறிக்கு விலை முடிவுசெய்வது யார்? ஈரோட்டு மஞ்சளுக்கும், திருச்சி சிறுதானியத்துக்கும் யார் சொல்வது விலை? அதன் உற்பத்தியுடன் சிறிதும் தொடர்பு இல்லாத யாரோ ஒரு வியாபாரிதான் அந்த விலையை முடிவு செய்கிறார். ஊருக்கெல்லாம் இருக்கும் உரிமை, ஊருக்கே படியளக்கும் விவசாயிக்கு இல்லை. 'எம்.ஆர்.பி-யைவிட அதிக விலைவைத்து விற்கிறார்கள்’ என்பதைப் பற்றி பேசும்போது, இதைப் பற்றியும் நிறையவே சிந்திப்போம்.



No comments:

Post a Comment