சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jul 2015

சுஷ்மாவின் அரசியல் சூன்யம் : மோடி மந்திரமா, மூடு மந்திரமா?

ட்டத்தில் இருந்து அத்வானி விலகிக்கொண்டதால்... அடுத்த பிரதமர் தான்தான் என்ற நம்பிக்கையோடு இருந்த சுஷ்மாவின் கனவில் இடியை இறக்கினார் ஒரு மோடி. பிரதமர் பதவி இல்லா விட்டாலும் குறைந்தபட்சம் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவியாவது கிடைத்ததே என்று தன்னை தேற்றிக்கொண்ட சுஷ்மாவின் அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்க இருக்கிறார் இன்னொரு மோடி. அதாவது லலித் மோடி. 

கிரிக்கெட் சூதாட்டத்தின் சூத்திரதாரி. வருமான வரித்துறையின் அமலாக்கப்பிரிவுக்கு தெரிந்தமட்டில் 1,700 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி என்று பல வகை களிலும் தில்லுமுல்லு செய்தவர் லலித் மோடி.  வரி ஏய்ப்பு சம்மந்தப்பட்ட விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லலித் மோடிக்கு 2010ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸ் தனக்கு அனுப்பப்பட இருப்பதை முன்கூட்டியே தெரிந்தகொண்ட லலித் மோடி,  நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார். 


அதனால் இந்திய அரசு அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. 'எங்கள் நாட்டில் கிரி மினல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உங்கள் நாட்டில் இருப்பது சரியல்ல. அவரை உடனே இந்தியாவுக்கு அனுப்புங்கள்' என்று அப்போதைய மத்திய அமைச்சரான ப.சிதம்பரம், இங்கிலாந்துக்கு கோரிக்கை வைத் தார். ஆனால் அவரது கோரிக்கையை இங்கிலாந்து அரசு கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில் பிஜேபி அரசு புதிதாக பதவிக்கு வந்தது. வெளிவிவகாரத்துறை அமைச்சரான சுஷ்மா, ‘கான்சர் நோயால் பாதிக்கப்பட்ட லலித் மோடியின் மனைவி போர்ச்சுகல் நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரை பார்ப்பதற்கு லலித் மோடி போர்ச்சுகல் செல்ல வேண்டும் என்பதால் அவருக்கு விசா வழங்கி உதவி செய்யுங்கள்’ என்று இங்கிலாந்து அரசுக்கு சென்ற ஆண்டு கடிதம் எழுதினார். இங்கிலாந்து ஊடகங்களில் இப்போது அம்பலமாகி இருக்கும் இந்தக் கடிதம்தான், இப்போது சுஷ்மாவின் கழுத்தை சுற்றி இறுக்கி வருகிறது.

சுஷ்மா குடும்பத்துக்கும் லலித்மோடிக்கும் இடையே இருக்கும் நட்பு என்பது 20 ஆண்டு கால நட்பு என்பதும், சுஷ்மாவின் மகள் பான்சூரி சுவராஜ்தான் லலித் மோடியின் பாஸ்போர்ட் வழக்கில் நான்கு ஆண்டுகளாக ஆஜாராகிவருகிறார் என்ற விவரங்களும் பிஜேபியினரையே திகைப்பில் வாயடைக்க வைத்திருக்கின்றன. சுஷ்மா செய்தது சரியா... தவறா.. என்ற விவாதம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இந்தக் கடிதத்தை மீடியாக்களுக்கு கசியவிட்டதே பிரதமர் மோடியின் ஆட்களாகத்தான் இருக்கும் என்று இன்னொரு பக்கம் செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன.
காரணம் ‘சுஷ்மாவைவிட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே என் குடும்பத்துக்கு நெருக்கம். ஆக்ச் சுவலி என் வெய்ஃபை போர்ச்சுகலுக்கு கூட்டிக்கொண்டு போனது அவர்தான்’ என்று லலித் மோடி பேட்டி ஒன்றில் திடீர் டுவிஸ்ட் கொடுக்க,  ஐபிஎல்-ஐ விட லலித் மோடியின் பேட்டி விறுவிறுப்பானது. 

‘’2013ம் ஆண்டு தன் பெயர் பிரதமர் பதவிக்காக முன்மொழியப்பட்ட போது அதை சுஷ்மா எதிர்த்தார். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தான் சிபாரிசு செய்தவர்களுக்கு வசுந்தரா ராஜே சீட் கொடுக்கவில்லை. அதனால் இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இவர்களால் பிரச்னை வரும் என்ற அச்சம் நரேந்திர மோடிக்கு உண்டு. அதனால்தான் லலித் மோடி என்ற ஒரே அஸ்திரம் கொண்டு தன் அரசியல் எதிரிகளான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா ஆகிய இரண்டு பேருக்குமே அரசியல் சதுரங்கத்தில் ‘செக்‘ வைத்திருக்கிறார் நரேந்திர மோடி” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

‘நரேந்திர மோடிக்கும் இந்த சர்ச்சைக்கும் சம்பந்தமில்லை. சுஷ்மாவுக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இது அவரது வேலையாகத்தான் இருக்கும்‘ என்ற ஒரு செய்தியும் டெல்லியில் அனல் காற்றை விட அதிக வெப்பத்தில் பரவி வருகிறது. லலித் மோடியால் கிளம்பியிருக்கும் இந்த அரசியல் அனலில், இப்போது காங்கிரஸ் சந்தோஷமாக குளிர்காய்கிறது.
‘ஊழலே இல்லாத ஒரு வருட ஆட்சி’ என்று பிஜேபி அடித்த டமாரத்தின் டங்கு வாரை  அறுக்க, அது ப.சிதம்பரத்தை இப்போது களம் இறக்கி இருக்கிறது. துவங்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரையே இப்பிரச்னையை முன்வைத்து முடக்க ராகுல் காந்தியே உத்தரவிட்டுவிட்டாராம்.

அதனால் வேறு வழியில்லாமல், சுஷ்மாவையும் வசுந்தரா ராஜேவையும் ஊழல் அற்றவர்கள். சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நரேந்திர மோடியிடமே இப்போது வந்திருப்பதுதான் திருப்பம். 

சுஸ்மா அரசியலின் சில சுவாரஷ்யமான பக்கங்கள்!


@ அது 1999- ம் ஆண்டு. வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற பிறகு அந்தக் கட்சி சந்தித்த மிகப் பெரிய சவால் அது! ‘பெல்லாரி (கர்நாடகா) இடைத்தேர்தலில் சோனியா காந்தியே போட்டியிடுவார்’ என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தை அடுத்து, அவரை எதிர்த்து யாரை களம் இறக்கினால் மானம் கப்பல் ஏறாமல் இருக்கும்‘ என்று பிஜேபியின் பெரிய தலைகள் எல்லாம் டெல்லியில் ஒன்றுகூடி மணிக்கணக்கில் சிந்தனையை உருட்டிய போது, அவர்கள் அத்தனை பேர் எண்ணத்திலும் பளிச்சிட்ட ஒரே பெயர் - சுஷ்மா ஸ்வராஜ்!

காரணம் ஹரியானாவின் சிங்கமாக திகழ்ந்த அம்மாநில முதல்வர் பன்சிலாலை தனது இருபத்து ஐந்தாவது வயதிலேயே தேர்தலில் வீழ்த்தியவர் சுஷ்மா. ‘இந்திரா காந்தியின் பெயரைச் சொன்னாலே எதிர்க்கட்சிகள் நடுநடுங்கிய எமர்ஜென்சியின்போது,  ஜெயபிரகாஷ் நாராயணனின் தலைமையின் கீழ் அஞ்சாது களப்பணி ஆற்றியவர். இந்திராவையே   எதிர்த்தவருக்கு சோனியாவை எதிர்ப்பதில் எந்த தயக்கமும் இல்லை. 

ஆனால்,  பஞ்சாப், ஹரியானா, டெல்லி மிஞ்சி மிஞ்சிப் போனால் வட கிழக்கு மாநிலம்... என்றே இருந்த சுஷ்மாவுக்கு தென் இந்தியா என்பது ஒரு தூரத்து நாட்டைப் போலத்தான். கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், மொழி, அரசியல்... என்று எதிலும் அவருக்கு பரிட்சயம் கிடையாது. இருந்தாலும் கோலியாத்தை எதிர்க்க துணிந்த தாவீதைப் போல சுஷ்மா தைரியமாக களம் இறங்கினார். 

‘முப்பதே நாளில் ஹிந்தி’ என்று புத்தகம் போடுகிறவர்களே வெட்கி தலைகுனிகிற மாதிரி எண்ணி பதினைந்தே நாட்களில் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ஒரு பிரஜையைப் போல கன்னடம் கற்றுக் கொண்டு தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் சென்று அவர்கள் மொழியிலேயே பேசி ஆதரவு திரட்டினார்.

கறுப்புப் பூனை படையோடு வந்து பிரச்சாரம் செய்த சோனியாவுக்கும் தங்களின் அன்றாட பிரச்னைகளை புரிந்து கொண்டு அணுகும் சுஷ்மாவுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை பெல்லாரி மக்கள் உணர்ந்தார்கள். இருந்தாலும் கர்நாடாக என்பது காலம் காலமாகவே காங்கிரஸ் ஆதரவு மாநிலமாக இருந்ததால், சுஷ்மாவால் வாக்கு வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர சோனியா வெற்றி பெறுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. சுஷ்மாவின் புத்திசாலித்தனம் கலந்த கடின உழைப்பை மெச்சும்வகையில் வாஜ்பாய் அவரை மேல்சபை உறுப்பினராக்கி, அமைச்சராகவும் ஆக்கினார். ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இல்லாத ஒருவர் பிஜேபி அமைச்சரவையில் இடம்பெற்றது அப்போது பலரது புருவங்களை உயர்த்தியது. 

சோனியாவை எதிர்த்து போட்டியிட்டதாலோ என்னவோ... சுஷ்மா ஸ்வராஜ் தன்னை ஒரு பிரதமர் வேட்பாளர் அளவுக்கு இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரசியல் தலைவராகவே பாவித்து நாகரிகமாவும், நளினமாகவும் அரசியல் செய்துவந்தார். அடிப்படையில் அவர் ஒரு வக்கீல் என்பதும், ஹரியானவில் அமைச்சராக இருந்த அனுபவமும் அவருக்கு இப்படிப்பட்ட அரசியல் செய்ய கைக்கொடுத்தது.  அத்வானியின் ரத யாத்திரையின் போது சுஷ்மாவும் அதில் கலந்து கொண்டு முக்கிய பங்காற்றியதால்...அத்வானியின் உள் வட்டத்திற்குள் ஒரு உறுப்பினரானார்.

2009ம் ஆண்டு சுஷ்மாவின் வாழ்கையில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அத்வானி நாடாளுமன் றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுக்க... அந்தப் பொறுப்பு சுஷ்மாவுக்கு கிடைத்தது. எதிர்கட்சித் தலைவர் என்ற பதவியை ‘பிரைம் மினிஸ்டர் இன் வெயிட்டிங்’ அதாவது ‘அடுத்த பிரதமர்’ என்றே பல அரசியல் விமர்சகர்கள் அப்போது அர்த்தம் எடுத்துக் கொண்டு எழுதினர். 

உலக நாடுகளின் அரசியல் மரபுப்படி வெளிநாட்டுத் தலைவர்கள், நம் நாட்டுக்கு அரசு முறை பயணமாக வரும்போது பிரதமருக்கு அடுத்தபடியாக எதிர்கட்சித்தலைவரை சந்திக்கும் வழக்கம் உண்டு என்பதால்... சுஷ்மாவுக்கு அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளும் உலக அரசியல் பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தியது.


2014ம் ஆண்டு பிஜேபி மிருக பலத்தோடு ஆட்சியைப் பிடித்தபோது, இந்த அனுபவம்தான் சுஷ்மாவை வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் ஆக்கியது. ஆனால் பிரதமர் கனவில் இருந்த சுஷ்மாவுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் என்ற பதவி மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அதுவும் இல்லாமல் பிரதமரே கடந்த ஒரு வருடத்தில் 18 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு ஏறக்குறைய வெளிவிவகாரத்துறை அமைச்சரைப் போல் செயல்பட்டதும்... தன் அமைச்சரகத்தின் பல வேலைகளை பிரதமரின் அலுவலகம் பிடுங்கிக் கொள்வதையும் பார்த்த சுஷ்மா, உள்ளுக்குள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார். 

அதைவிடக் கொடுமை என்னவென்றால், மோடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது சம்மந்தப்பட்ட அமைச்சரான சுஷ்மா பல சமயங்களில் அப்பயணக்குழுவில் இடம்பெறுவதில்லை என்பதுதான்.

ஆனால் சுஷ்மாவின் தரப்போ, ‘ கடந்த ஒரு வருடத்தில், பிரதமர் 18 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்றால்... சுஷ்மா 22 நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார். பிரதமர் பயணத்திற்கான அடிப்படை வேலைகளை சுஷ்மா செய்வதால்தான் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பயணங்களாக அமைகின்றன’ என்று சப்பை கட்டு கட்டுகின்றன.

@ கட்சி அரசியலைத் தாண்டி அவர் பலருக்கும் ஆதர்ஷமாக ஒரு காலத் தில் இருந்ததற்கு காரணம் அவரது எளிமையான தோற்றம். எண்ணை யிட்டு படிந்து வாரிய தலை. அகலமான குங்குமப்பொட்டு, வெளியில் தெரியும்படி அணியப்பட்டிருக்கும் தாலி. பாந்தமான சேலை. வெளித் தோற்றம் மரபு சார்ந்தாக இருந்தாலும் டெல்லியில் கோலோச்சும் அரசியல் ஜாம்பவான்களுக்கு இணையாக அரசியல் பகடைகளை சாதுர்யமாக உருட்டி விளையாடும் சுஷ்மா சுவராஜின் தீரமும், புத்திக் கூர்மையும் எதிர்கட்சிக்காரர்களைக்கூட கவர்ந்த ஒரு விஷயம். 

மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்று தடாலடி அரசியல் சுஷ்மாவின் ஸ்டைல் கிடையாது. வெளித்தோற்றத்துக்கு பாரம்பரியம். செயல்பாட்டுக்கு சாதுர்யம். இதுதான் சுஷ்மாவின் டிரேட் மார்க்!

சுஷ்மாவின் அரசியல் நாகரிகம் ஒரு சில சந்தர்ப்பங்களில் தடம்புரண்டதும் உண்டு. ‘சோனியா பிரதமராக பதவியேற்றால் மொட்டையடித்துக் கொள்வேன். விதவையைப் போல வெள்ளை சேலையைத்தான் அணிவேன். கட்டாந்தரையில்தான் படுத்து தூங்குவேன்’ என்று அவர் மங்காத்தாவாக மாறி சபதம் போட்ட வரலாறும் அவரது அரசியல் சரித்திரத்தில் உண்டு.

ஆனால் நல்ல வேலையாக 2004ம் ஆண்டு தேர்தலில் ஜெயித்த சோனியா, தான் பிரதமராகாமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதால்... சுஷ்மாவின் தலைமுடி தப்பியது. 

@ திங்கட்கிழமை என்றால் வெள்ளை சேலை, செவ்வாய்கிழமை என்றால் சிகப்பு சேலை... என்று ஒவ் வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ணச் சேலை கட்டுவது சுஷ்மாவின் ஸ்டைல். அவரது அலமாரியில் இருக்கும் சேலைகளும் ஏழாகப் பிரிக்கப்பட்டு அதன்படிதான் மாட்டிவைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் சுஷ்மாவுக்கு ஜோஸ்யத்தில் இருக்கும் நம்பிக்கை. திங்கட்கிழமை திங்கள் அதாவது நிலவுக்கு உகந்த தினம். நிலவுக்கு ஏற்றது முத்து. முத்துவின் வண்ணம் வெள்ளை. அதனால் திங்கட்கிழமை வெள்ளை நிறம்... இப்படி ஒரு லாஜிக்கில்தான் சுஷ்மா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் சேலைகள் உடுத்துகிறாராம்.
@ இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று ராஜபக்சேவின் ஊதுகுழலாக செயல்பட்டதும், தன்னை சந்திக்க வந்த தமிழக மீனவர்களையே, "இலங்கை கடல் பகுதிக்கு போனால்... நடப்பதே வேற...!” என்று மிரட்டாத குறையாக கூறியதும் சுஷ்மா மீது பொதுவாக ஒரு அசூயை ஏற்படுத்திவிட்டது.
பெல்லாரி இடைத்தேர்தலின்போது தனக்கு உதவினார்கள் என்பதற்காக சட்ட விரோதமாக குவாரிகளை நடத்தும் கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்களோடு சேர்ந்து கொண்டு, கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியை ஆட்டம் காண வைத்ததும் சுஷ்மாவின் அரசியலில் கறுப்பு பக்கங்கள்.



No comments:

Post a Comment