சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jul 2015

மாற்றுத்திறன் முதலாளிகள்! சாத்தியமாக்கிய அசாதாரணத் தாய்

‘செரிப்ரல் பால்ஸி’யால் பாதிக்கப்பட்டு, உடல் செயல்பாட்டை 90 சதவிகிதம் இழந்துவிட்ட இரட்டை ஆண் குழந்தைகள் சுந்தர்ராம் மற்றும் ஸ்ரீராமை, சாதாரணக் குழந்தைகளுக்கு நிகராக ‘ஜம்’மென்று வளர்த்து, தொழிலதிபர்களாக ஆக்கி, ஓர் உதாரணத் தாயாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் ராதா ரமேஷ்!
சென்னை, பல்லாவரத்தில் இருக்கிறது சகோதரர்களின் ‘ட்வின் ட்விக்ஸ்’ தொழிற்கூடம். மந்தாரை இலைகளைச் சுத்தம் செய்து, அளவாக வெட்டி, பல அளவுகளில் தட்டுகள், கிண்ணங்கள் செய்து, பல்வேறு அமைப்புகளுக்கு சப்ளை செய்வதுதான் இந்த இரட்டையர்களின் தொழில்.

நாவலூரில் இருக்கும் ராதாவின் இல்லத்தில் அவர்களைச் சந்தித்தபோது, வாழ்க்கைக்கான புது அர்த்தத்தையே போதித்தது அந்தக் குடும்பம்!
‘‘திருச்சி, மணக்கால்தான் எங்க சொந்த ஊர். கணவர் ரமேஷுக்கு போபாலில் வேலை என்பதால, அங்கே செட்டில் ஆனோம். 86-ம் வருஷத்துல எங்களுக்கு ரெட்டைக் குழந்தைங்க பிறந்தாங்க. ஏழாவது மாத ஆரம்பத்திலேயே பிறந்துட்டதால, ரொம்ப எடை குறைவா இருந்தாங்க. நாலு மாசத்துக்கு அப்புறம், குப்புற விழறது, உட்காருவது, தவழ்றதுனு அவங்ககிட்ட நார்மல் வளர்ச்சிக்கான எந்தப் படிகளும் (மைல்ஸ்டோன்) இல்லை. நியூரோ ஸ்பெஷலிஸ்ட், ‘இது செரிப்ரல் பால்ஸி’னு சொன்னார். சென்னைக்கு வந்து, ஃபிஸியோதெரபிஸ்ட் சொன்ன ‘தெரபி’ முறைகளை நானே கத்துக்கிட்டு, குழந்தை களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன்.
குழந்தைகளால நடக்க முடியலைனாலும், சொல்றதைப் புரிஞ்சுகிட்டு செய்யும் அவங்க திறனை முழுமையா வெளிக்கொண்டுவர நினைச்சேன். வெளி உலகைக் காண்பிக்கணும். அப்போதான் சமூகச் செயல்பாடுகளை கத்துக்குவாங்க. அவங்க எதை சுலபமாகக் கத்துக்கிறாங்களோ... அந்த முறையில் சொல்லித் தரணும்’’ எனும் ராதாவும் கணவரும், குழந்தைகளை ஆளாக்க தளராத அன்புடனும் நம்பிக்கையுடனும் செயலாற்றியிருக்கிறார்கள்.
‘‘குழந்தைகளுக்காக தன் வேலையை தியாகம் பண்ணிட்டு சென்னை வந்த பிறகு, கட்டுமானத் தொழிலை ஆரம்பிச்சார் கணவர். பசங்களை வித்யாசாகர் சிறப்புப் பள்ளியில் சேர்த்துட்டு, அங்கேயே சிறப்புக் கல்வியில் டிப்ளோமா படிச்சேன். மூணு வருஷம் சிறப்பு ஆசிரியரா இருந்தேன்.
பசங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது படிப்பு சொல்லிக் கொடுத்திடலாம்னு முயற்சி பண்ணி, ‘அகடமிக் டிரெயினிங்’ கொடுத்தேன். ஆனா, ‘அம்மா, என்னால படிக்க முடியல’ன்னு பசங்க சொன்னப்போ, அதை நிறுத்திட்டேன். 18 வயசானதும், படிப்புக்கு மாற்று என்னன்னு யோசிச்சப்போதான், தொழிற்கல்வியில் உற்சாகமான அவங்களை, தொழிலில் ஈடுபடுத் தலாமேனு தோணுச்சு.
அவங்க ரெண்டு பேருக்குமே ரோல் மாடல் அவங்க அப்பாதான். அவரை மாதிரி பிசினஸ் பண்ணினா, உற்சாகமா ஈடுபடு வாங்கன்னு தோணுச்சு. அதுக்கு நாங்க தேர்ந் தெடுத்ததுதான், மந்தாரை இலையில் ‘ஈகோ ஃப்ரெண்ட்லி’ பிளேட், கப் தயாரிக்கும் தொழில்!’’ எனும் ராதா, தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தொழிலைக் கற்றுக் கொண்டு, மகன்களுக்கும் கற்றுத் தந்து, 2010-ல் இந்த யூனிட்டை ஆரம்பித்திருக்கிறார்.
இரட்டைச் சகோதரர்களுக்குக் கைகுலுக்கி னோம். ‘‘ஒவ்வொரு செயலுக்கும் பின்னால ஓராயிரம் வலிகளும் பிரயத்தனமும் இருக்கு. நானும் என்னோட கணவரும் ஒவ்வொரு நிலையிலும் தன்னம்பிக்கையோட இவர்களை பயணிக்க வெச்சதுதான் இந்த வெற்றிக்குக் காரணம். இவங்களுக்கு வீட்டிலும் யூனிட்டிலும் உதவறதுக்கு கார்த்திக்னு ஒரு ‘கேர் கிவர்’ இருக்கார். அவர்தான் எங்க பசங்களோட நண்பன், சகோதரன் எல்லாமே!’’ - அம்மா சொல்வதைப் புரிந்து ரசிக்கிறார்கள் மகன்கள்.
‘‘வீல் சேரில் இருந்தபடியே, மார்க்கெட், யூனிட், கோயில்னு எல்லா இடங்களுக்கும் போய் வந்துடுவாங்க. இசை, ரெண்டு பேருக்குமே உயிர். நல்லா பாடுவாங்க. சுந்தருக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். சச்சினை நேர்லயே சந்திச்சிருக்கான். ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குவாங்க. அப்புறம் பேசிக்குவாங்க. அவங்களை சாதாரண மனுஷங்களா நடத்தினா, அது அவங்களுக்குப் பெரிய தன்னம்பிக்கை தரும்!’’
 
- கண்கள் நீரில் மின்னுகின்றன அந்த வெற்றித் தாய்க்கு!
இப்போதும் பல சிறப்புப் பள்ளிகளுக்கு ஆலோசகராகவும் தொழில் பயிற்றுநராகவும் சென்று வருகிறார் ராதா. சரியான வழிகாட்டுதல் இன்றித் தவிக்கும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் கும் தருகிறார்.
விடைபெற்றபோது, ஒரு கப் நிறைய தன்னம்பிக்கை டானிக் குடித்த உணர்வு!


No comments:

Post a Comment