சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2015

பெங்கால் டைகர் கங்குலிக்கு பிறந்தநாள்!

''உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' இதனை கூறியது தத்துவமேதையோ, அறிஞர்களோ அல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தான்.
கால்பந்திலிருந்து கிரிக்கெட்!
மேற்கு வங்க மாநிலத்தில் 1972ம் ஆண்டு பிறந்தவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர்; ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய சீனியர் அணியே தடுமாறும் ஆடுகளங்களில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் இடம் பிடித்தார். 1992ம் ஆண்டே ஒருநாள் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் போட்டியிலேயே சரியாக ஆடாததால் 4 வருடங்கள் கங்குலிக்கு கெட் அவுட் சொன்னது டீம் இந்தியா.
1996ல் லார்ட்ஸ் டெஸ்டில் மூலம் டெஸ்டில் அறிமுகமான கங்குலி முதல் போட்டியிலேயே சதமடித்து தன் தேர்வை நியாயப்படுத்தினார். இவர் அணியில் சிறப்பாக ஆடி வந்தாலும், இந்திய அணி வெளிநாட்டு ஆடுகளங்களில் மோசமான தோல்விகளையே பதிவு செய்து வந்தது. 1999ம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய அணி தோற்று அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் வெளியேறினாலும் இலங்கைக்கு எதிரான கங்குலியின் 183 ரன்கள் குவித்த இன்னிங்ஸ் பெரிதும்  பேசப்பட்டது.அதன்பிறகு ரசிகர்களால் செல்லமாக 'தாதா' என அழைக்கப்பட்டார் கங்குலி.
மாற்றத்தை ஏற்படுத்திய கேப்டன்:
இந்திய அணியின் அப்போதைய கேப்டன் அசாருதின் ஊழலில் சிக்கினார். அடுத்து சச்சின் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, மீண்டும் வெளிநாட்டு மண்ணில் மண்ணை கவ்வியது.அவ்வளவு தான் இந்திய அணியின் காலம் முடிந்துவிட்டது. இந்திய அணியை முன்னணி வீரர்களால் கூட வழிநடத்த முடியவில்லை என்ற நிலையில், கேப்டனாக்கப்பட்டார் கங்குலி.
ஒருகட்டத்தில்." இந்திய கிரிக்கெட் அணி அவ்வளவுதான்.. வெளிநாட்டு மண்ணில் ஜெயிக்காது, பழைய பெருமையை இழந்துவிட்டது! அதற்கு ஏற்றதுபோல் அணியை வழிநடத்தும் கேப்டனே ஊழலில் சிக்கி அணியைவிட்டு நீக்கப்பட்டு விட்டார்!" என ஏளனம் செய்யப்பட்ட நிலையில், கேப்டனாக்கப்பட்டார் கங்குலி
அப்போது இந்திய அணி தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்தது, கங்குலி பதவியேற்ற பின்னர் பழைய வீரர்களை மட்டுமே நம்பி இருந்த இந்திய அணிக்குள் புதிய இளம் வீரர்களின் வருகை அதிகரித்தது.அதிலிருந்து இந்திய அணி என்றால், அந்நிய மண்ணில் ஜெயிக்காத அணி என்ற வரலாற்றை மாற்றி உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் நாட்டிலேயே வென்று  இந்திய அணியில் அயல்நாட்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கங்குலி.
இந்தியாவில் இடக்கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்களா? என சர்வதேச கிரிக்கெட்டில் இடது கை ஆட்டக்காரர்களை வைத்து கிலி காட்டிய நாடுகளுக்கு பதலடி தந்தவர் கங்குலி. 11 வீரர்களையும் ஆஃப் சைடில் நிற்க வைத்து பந்துவீசினால் கங்குலியால் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முடியும் என்கிற அளவுக்கு உலகின் நம்பர் 1 இடதுகை ஆட்டக்காராக பேசப்பட்டவர் கங்குலி.

லார்ட்ஸ் மைதான பால்கனி!
வெளிநாட்டு வெற்றிகளில் உச்சகட்டமாக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து சட்டையை கழற்றி சுற்றியது இன்றளவும் லார்ட்ஸ் மைதான பால்கனியை பார்ப்பவர்கள் கண்களில் மறையாத காட்சியாக  இருக்கிறது.இந்த மைதானத்தில் தான் கங்குலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கங்குலி அவுட்!
உலகின் மிகச்சிறந்த கேப்டன் இந்திய அணியை 20 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கு கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமைக்கு பின்னர் காத்திருந்தது அதிர்ச்சி! இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சேப்பலுக்கும் கங்குலிக்கும் கருத்து வேறுபாடு, இ-மெயில் விவகாரத்தை வெளியிட்டது போன்ற காரணங்களுக்காக அணியிலிருந்தே கழட்டிவிடப்பட்டார் கங்குலி. கொல்கத்தாவின் இளவரசன் என வர்ணிக்கப்படும் கங்குலி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான தென்னாப்பிரிக்க கொடிகளுடன் எதிரணியை ஆதரித்து கங்குலி இல்லாத இந்திய அணிக்கு பதிலாக எதிரணியை ஆதரிப்போம் என உணர்ச்சி பொங்கிய ரசிகர்கள் கங்குலிக்கு மட்டுமே உண்டு.

தாதா ரிட்டர்ன்ஸ்!
உலகின் சிறந்த கேப்டன் அணியில் கூட இல்லாத நிலைக்கு சென்றார். அவ்வளவுதான் கங்குலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு வர்ணனையாளர் ஆகிவிடலாம் என்று வர்ணிக்கப்பட்டார். சற்றும் கவலைப்படாமல் தன்னை நிருபித்து அணியில் இடம் பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதமடித்து தனது கிரிக்கெட் வாழ்க்கை முடியவில்லை என நிருபித்தார்.
2011ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரை தவிர, அனைத்து வீரர்களின் திறமையையும் அடையாளம் கண்டு அணிக்கு கொண்டு வந்த பெருமை கங்குலியையே சாரும். 
இன்று உலக சாம்பியன் என மார்தட்டிக்கொள்ளும் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் முதல் வாய்ப்பை அளித்தவர். ஆறாவது வீரராக களமிறங்கிய சேவக்கை இவர் தொடக்க வீரர் என்று அடையாளம் காட்டியவர் கங்குலி தான். இன்று மிஸ்டர் கூலாக இருக்கும் தோனிக்கு முதல் வாய்ப்பு வழங்கியது கங்குலி தான்.
இந்திய அணியில் மீண்டும் கங்குலி!
ஐபிஎல் போட்டிகளிலும் அசத்திய கங்குலி அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கங்குலியின் இன்னிங்ஸ் முடியவில்லை. அடுத்த வாய்ப்பும் அவருக்கு அடுத்தடுத்து வந்தது.ஐ.பி.எல் ஊழல் குறித்து விசாரிக்க, முட்கல் கமிட்டி அணுகியது. தற்போது வங்கதேச சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணிக்கு ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் அக்ரஸிவ் என்று வர்ணிக்கப்பட்ட கங்குலி தற்போதைய அங்க்ரஸிவ் கேப்டன் கோலிக்கு நிச்சயம் பலமாக இருப்பார். இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வுக்கு பரிந்துரைக்கப்படும் பெயர்களில் கங்குலியின் பெயர் தான் முதலிடத்தில் உள்ளது.
ஒரு தலைவன் எப்படி இருக்க வேன்டும் என்பதற்கு கங்குலியை விட சிறந்த உதாரணம் யாரும் இல்லை என்றே கூறலாம்!! ஒரு நல்ல வாகனத்தை வைத்து பந்தயத்தில் ஜெயிப்பது எளிது. ஆனால் பழுதான வாகனத்தை வைத்து பந்தயத்தில் முதல் பரிசு வெல்வது கடினம் ஆனால் அதனை கங்குலி செய்து காட்டியவர், எட்டாவது இடத்தில் இருந்த இந்திய அணியை  இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்த தாதா என செல்லமாக அழைக்கப்படும் கங்குலிக்கு பிறந்தநாள் இன்று!!



No comments:

Post a Comment