சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

'வியாபம்' ஊழல்: மோசடிகள் அரங்கேறியது எப்படி?

நாடுமுழுவதும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் மத்திய பிரதேச மாநில 'வியாபம்' ஊழல் நடந்தது குறித்து நாள்தோறும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
பல கோடி ரூபாய் பண முறைகேடுகள், 49 பேரின் மர்ம மரணங்கள் என்று நீளும் வியாபம் முறைகேடு, உச்ச நீதிமன்றம் தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும் நிலைக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதே நேரத்தில் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அக்கட்சிக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

அமலாக்கப் பிரிவால் தேடப்பட்டுவரும் முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானபோதும், பாஜக  தலைமை அதற்கு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இறங்கவில்லை. அதே போல மகாராஷ்ட்ரா அமைச்சர் பங்கஜா முண்டே மீது 100 கோடி ரூபாய் ஊழல் புகார் கூறப்பட்ட விவகாரத்திலும் பாஜக தலையிடவில்லை. அதனால் ம.பி.விவகாரத்திலும் பாஜக மௌனம் சாதிக்கும் என்றே கூறப்படுகிறது.             

இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரங்களை இலேசில் விட்டுவிடுவதாக இல்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில்,  பா.ஜனதாவுக்கு எதிராக கடும் நெருக்கடிகளை கொடுக்க தொடங்கி உள்ளது. 

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் தொழில் முறை தேர்வு வாரியமான 'வியாபம்' எப்படி ஊழல் முறைகேடுகளின் கேந்திரமாக மாறியது, 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் பயணம் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
'வியாபம்'  ஊழலில் 4 நூதனமான முறைகள் கையாளப்பட்டுள்ளன. தொழில்முறைக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கும், அரசு வேலையில் சேர்வோருக்கும் தகுதித் தேர்வு நடத்துவதுதான் 'வியாபம்' நிறுவனத்தின் பிரதான பணியாகும். இந்நிலையில், தகுதித் தேர்வை எழுத விரும்பாதவர்கள் லஞ்சம் கொடுத்து கல்லூரிகளில் அல்லது அரசு வேலைகளில் சேர்ந்துள்ளதாக  குற்றச்சாற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3ல்  2 பேர் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் ஆவர். 70 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் ஆவர். இதுதவிர இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் மற்றும் சாட்சிகள் 49 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.  ஊழல் முறைகேட்டில் ஆயிரக்கணக்கில் கைதுகள், 49 பேர் மரணம் ஆளுநர், முதல்வர் என்று உச்ச பட்ச அதிகாரங்கள் ஈடுபட்டிருப்பது இதுவே முதன்முறை என்பதால், இவ்விவகாரத்தில் ஊடகங்களின் கவனமும் குவிந்திருக்கிறது. 

இந்த மோசடி, தொழில்நுட்பம்  மூலம் நடைபெறவில்லை. மாறாக 4 நூதன முறைகளில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 'வியாபம்'  தேர்வை எழுதாமலேயே கல்லூரியிலோ அல்லது அரசு வேலையிலோ சேர விரும்புகிறவர்களை இடைத்தரகர்கள் அடையாளம் கண்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படத்துக்கு பதில் திறமையான ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து அவரது புகைப்படத்தை ஒட்டி ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுத அனுமதித்துள்ளனர்.

நுழைவுச்சீட்டில் உள்ள பெயருக்கும், புகைப்படத்துக்கும் உள்ள முரண்பாட்டைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு தேர்வுக் கூட கண்காணிப்பாளருக்கு லஞ்சம் கொடுத்து ஈடுகட்டியுள்ளனர். தேர்வு முடிவு வெளியானதும், தேர்வு எழுதியவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, உண்மையான விண்ணப்பதாரரின் புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டி உள்ளனர்.

அடுத்து, திறமையான மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று கடைசி நேரத்தில் கல்லூரியில் சேராமல் போனது போல் மோசடி செய்துள்ளனர். அந்த இடங்களை வேறு மாணவர்களுக்கு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, பணத்தைப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் இடங்களை ஒதுக்கியுள்ளனர்.

மூன்றாவதாக, விண்ணப்பதாரர் சார்பாக தேர்வெழுத திறமையானவர்கள் கிடைக்காத பட்சத்தில், தேர்வு அறையில் திறமையானவர்களுக்கு பின்னால் லஞ்சம் கொடுத்தவர்களை அமர வைத்து ‘காப்பி’ அடிக்க அனுமதித்துள்ளனர்.

நான்காவதாக, திறமையானவர்கள் கிடைக்காதபட்சத்தில் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்து விட்டு, கணினியில் சாப்ட்வேர் உதவியுடன் மதிப்பெண்ணை திருத்தி சான்றிதழை வழங்கி உள்ளனர். இந்த முறைகளில் மிக எளிதாக சட்ட மீறல் நடந்துள்ளது மிகப்பெரிய அளவிற்கு ம.பி.அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.



No comments:

Post a Comment