சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Jul 2015

இறந்தால்தான் விருதா? எம்.எஸ்.வி.யை மறந்துபோன மத்திய, மாநில அரசுகள்!


‘மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு! இந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு!’ - என்ற பாடல் வரிகளைப் பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று உயிரோடு இல்லை.
ஆனால், அவருடைய இசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. 87 வயதான எம்.எஸ்.வி,  இந்தியத் திரையுலகமே போற்றும், மூத்த இசையமைப்பாளர். ‘தனியாக 500 திரைப்படங்களுக்கு மேலாகவும், டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 700 திரைப்படங்களுக்கு மேலாகவும் இசையமைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு தன் பாடல்களின் மூலமாக, ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி, தமிழ் திரையுலகிலும், மற்ற மொழி திரையுலகிலும் ஏராளமான கவிஞர்களையும், பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தவர் மெல்லிசை மன்னர். காலம் மாறினாலும், காட்சிகள் மாறாது என்பதற்கு பொருத்தமான எம்.எஸ்.வி.,  ஆரம்பக் காலம் முதல் கடைசி வரையும், தன் ஆர்மோனிய பெட்டியையே பிரதான இசைக்கருவியாகப் பயன்படுத்தினார்.

வாழ்நாள் சாதனையாளராக விளங்கிய எம்.எஸ்.வி.க்கு, அவர் வாழ்ந்த காலத்திலேயே, மத்திய அரசின் எந்த ஒரு விருதுகளும் வழக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படாத எம்.எஸ்.வி, ‘எனக்கு ஜனாதிபதி விருதெல்லாம் வேண்டாம்... ஜனங்களின் விருதே போதும்!’ எனக் கூறுவார். ஆனாலும், ஒரு கலைஞனுக்கு ஊக்கம் கொடுப்பது, ‘விருதுகள்’ தானே.


எம்.எஸ்.வி. மறைந்த கடந்த 14-ம் தேதியன்று பல்வேறு தலைவர்களும், எம்.எஸ்.விக்கு இரங்கல் செய்தியினை தெரிவித்தனர். அந்த இரங்கல் செய்திகள் பல்வேறு அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 14-ம் தேதியன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''இதுவரை எம்.எஸ்.விக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நிச்சயமாக அடுத்த ஆண்டு எம்.எஸ்.விக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ செய்த கதையாக, ஒரு கலைஞர் உயிரோடு இருக்கும் காலங்களில் தான் செய்த சாதனைகளுக்கு கொடுக்கப்படும் விருதுகளை பெற்று மகிழ்வதற்கும், இறந்த பின்னர் கொடுக்கப்படுவதற்கும் இடையில் ஏராளமான மனவேதனைகள் அடங்கியுள்ளன. அந்த மனவேதனையின் வலி,  அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரியாது.

பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளபடி, ஒரு மத்திய அமைச்சர் சொன்னால் பத்மவிருது வழங்கப்படுமா? அப்போது இதுவரை விருது கொடுக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்றுதானே அர்த்தம். பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, ஜனவரி மாதம் பத்மவிருதுகள் வழங்கப்பட்டதே? அப்போது எம்.எஸ்.விக்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை? மத்திய அரசினால் வழங்கப்படும் விருதுகளில், அரசியல் தலையீடுகள் உள்ளது எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா? என பல கேள்விகள் எழுகின்றன.
அதே சமயம், மத்தியிலும் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள்தான் பெருமளவு மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. மத்தியில் அமையும் ஆட்சியில், தமிழக கட்சிகள் தொடர்ந்து கூட்டணி வைத்து வந்துள்ளன. தமிழகத்தின் நலனுக்காக கூட்டணி வைக்கும் கட்சிகள், நம் கலைஞர்களுக்கு மத்திய அரசின் விருதுகளை பெற்றுத்தருவதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.  ஒருவேளை,  'இன்னாருக்கு கொடுங்கள்..!'  என பரிந்துரை செய்தாலும் மத்திய அரசுகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
எம்.எஸ்.வி.க்கு இரங்கல் செய்தியை தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா கூட, ''எம்.எஸ்.வி. பல விருதுகளை பெற்றிருந்தாலும் அவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாதது எனக்கு என்றும் மனவருதத்தை அளித்து வந்தது. எனவே நான் முதல்வராக பதவியேற்ற 1991-ம் ஆண்டு முதல் எம்.எஸ்.விக்கு பத்ம விபூஷன் விருது வழங்க மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து வருவதாகவும், அதற்கு மத்திய அரசுகள் செவிசாய்க்கவில்லை'' என  தெரிவித்திருந்தார்.
பொதுவாகவே இதுபோன்ற பத்ம விருதுகள் வழங்குவதில் தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.  மறைந்த நடிகர் எம்.என். நம்பியார் கூட இது தொடர்பாக ஆதங்கப்பட்டிருந்த தனது ரசிகர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், " பல அவார்டுகள் என்னைத் தாண்டிப் போயிருக்கின்றன. எந்த அவார்டும் தானாக வருவதில்லை. அதற்கென்று பாடுபட சிலர் இருக்கவேண்டும். சுமாராக பரீட்சை எழுதும் மாணவனின் பெற்றோர் பரீட்சை தாளை திருத்தும் புண்ணியவானைக் கண்டு அவரை திருப்திப்படுத்தி பையனை பாஸாக்குவது என்பது எப்போதும் நடந்துகொண்டிருக்கும் ஒரு வெளிப்படையான விஷயம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசினை குறைகூறுவது ஒருபுறம் இருக்க, இதுவரை எத்தனை முறை எம்.எஸ்.விக்கு மாநில அரசின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது? 1960-80 காலக்கட்டங்கள் வரை  எம்.எஸ்.வி.தான் பிரதான இசையமைப்பாளராக இருந்துள்ளார். இந்த காலக்கட்டங்களில் காங்கிரஸ்,  தி.மு.க., அ.தி.மு.க. என மூன்று கட்சிகளும்தான் மாறி மாறி ஆட்சி செய்தன. காங்கிரஸ் ஆட்சியை இழந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து  அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால், இதுவரை தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருதைத் தவிர வேறு எந்த ஒரு விருதும் எம்.எஸ்.வி.க்கு வழங்கப்படவில்லை.

2009-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, 'உளியின் ஓசை' திரைப்படத்திற்கு சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான (வசனம்) விருதை, கருணாநிதியே பெற்றுக்கொண்ட நிகழ்வும் நடந்தது. விருது கொடுப்பவர்களே, விருதை பெற்றுக் கொள்வது சரியா? இது சரி என்றால், கலைஞர்களுக்கு உரிய விருதினை கொடுப்பதும், வாங்கிக்கொடுப்பதும் இவர்களின் கடமையல்லவா!

தற்போது தமிழகத்தை ஆளும் முதல்வரும், முன்பு ஆண்ட முதல்வர்கள் பலரும் திரைத்துறையை சார்ந்தவர்கள்தானே. நம் தமிழகத்தை சார்ந்த கலைஞர்களுக்கு, ஆட்சியாளர்கள் விருதுகளை பெற்றுத் தராதது வருத்தம் அளிக்கும் செயல்தானே! குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு பல நூறு சிறந்த பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி.க்கு, எம்.ஜி.ஆர் கட்சியின் அரசு செய்த கவுரவம் என்ன? மூத்த முதுபெரும் தலைவர் கருணாநிதிக்கும் இதுபற்றிய கவலைகள் இல்லை. ‘பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா எடுப்பவர்களும்’, ‘பாசத்தலைவிக்கு பாராட்டு விழா எடுப்பவர்களும்’, இனியாவது உரிய கலைஞர்களைச் சற்றுக் கவனிக்க வேண்டும்.

எம்.எஸ்.வி. வாய்ப்பு கொடுத்த பல பின்னணிப் பாடகர்களும், பாடலாசிரியர்களும் பல்வேறு மத்திய, மாநில அரசுகளின் விருதினை பெற்றுள்ளார்கள். ஆனால் தூக்கி விட்டவரின் கை தாழ்ந்தே இருக்கிறது. இதேநிலைதான் மறைந்த சிவாஜி, டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ், கண்ணாதாசன் போன்ற கலைஞர்களுக்கும். இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, கடந்த 2012-ம் ஆண்டு பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதினை, தனக்கு காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மத்திய அரசின் விருதுகளில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி, பத்மபூஷன் விருதினை திரும்ப ஒப்படைத்தது நினைவுக்கு வருகிறது.

'டர்ட்டி பிச்சர்' படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்ட அடுத்த ஆண்டிலேயே, பத்மஸ்ரீ விருதும் கொடுத்த மத்திய அரசு, நான்கு தலைமுறைகளைக் கண்டு, 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி. எந்த வகையில் விருதிற்கு குறைந்த தகுதியினை பெற்றுவிட்டதாகக் கருதுகிறது.

எம்.எஸ்.வி.க்கு பத்மஸ்ரீ விருது வழங்க முயற்சி செய்யப்படும் எனக் கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவாஜி, டி.எம்.எஸ் போன்றோருக்கு பாரத ரத்னா விருதைப் பெற்றுத்தர முன்வர வேண்டும்.

கலைஞர்களை கவுரவிப்பதில் வடக்கு முந்தியும், தெற்கு பிந்தியும் இருக்கும் நிலை எப்போதுதான் மாறுமோ?



No comments:

Post a Comment