சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2015

கிரீஸ் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்குமா? - ஓர் அலசல்


லக நாடுகளைக் கவலை கொள்ள வைத்துள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி, அந்நாட்டு மக்களை மட்டுமல்ல ஐரோப்பிய யூனியன் நாடுகள் தொடங்கி இந்தியா வரை அதிர்வலைகளை  ஏற்படுத்தி உள்ளது.
உலக பொருளாதார நிபுணர்கள் கடுமையான ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள். கிரீஸின் பாதிப்பு பிற நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கடித்து குதறிவிடக் கூடாது என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
உண்மையில் கிரீஸ் நாட்டுப் பொருளாதாரத்திற்கு என்னதான் நடந்தது?

பொதுவாக நம் மக்களிடையே இருக்கும் ஒரு வழக்கம் பிரச்னை என்று வந்தாலே பார்ப்பவருக்குக் கொண்டாட்டம்தான்- அது அவரை பாதிக்காதவரை! ஏதாவது ஒரு இடத்தில் ஒரு கூட்டம் நிற்பதைப் பார்த்தால் நம் கால்கள் உடனே அங்கு நின்றுவிடும். சம்பந்தம் இல்லையென்றாலும் அங்கே என்ன பிரச்னை என்று தெரியாமல் தலை வெடித்துவிடும்..நாம் இந்தியர்கள் ஆயிற்றே!

அப்படிப்பட்ட நாம், இந்த கிரேக்க பிரச்னை பற்றிப்பேசாவிட்டால் எப்படி?

இந்தப் பிரச்னை, நாம் தனி அளவில் சமாளிக்கும் அல்லது சமாளிக்க முற்படும் பிரச்னை போலத்தான் என்று எண்ணி சற்றுக் கவனித்தால், சிக்கலின் தீவிரத்தை உணர முடியும். எளிமையாக சொன்னால் எல்லாம் கிரெடிட் கார்டு பிரச்னை போலத்தான்.

”உங்களுக்கு ஒரு லட்சம் கிரெடிட் சேங்ஷன்  ஆகியுள்ளது”. இந்த தேன் சிந்தும் வாக்கியம் கேட்ட நாளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் நாள்.

“ஒரு பிரச்னையும் இல்லை. இந்த மாதம் ட்யூ 30,000 ரூபாய்தான். 5 ஆம் தேதி கட்டலாம். அதுவும் 500 ரூபாய் கட்டினால் போதும்”

நம்பிக் கட்டித்தொலைத்தால் அவ்ளோதான்... பர்ஸ் காலி.  உங்க வீட்டிலும் கிரேக்கப் பிரச்னைதான். கட்ட வேண்டிய பணம், வட்டிக்குமேல் வட்டிபோட்டு கிங்ஃபிஷர் மல்லையா கொடுக்கவேண்டிய தொகையைவிட அதிகமாக வந்து நிற்கும்...ஒரு நாளைக்கான பத்து சிகரெட் இரண்டாகக் குறைக்கப்படும். மூன்று வேளை உணவு ஒன்றாக மாறி உண்டி சிறுக்கும். பைக் ஓரங்கட்டப்பட்டு நடராஜா சர்வீஸ் ஆரம்பிக்கப்படும்.கிரெடிட் கார்டின் கைங்கர்யம் அவ்வளவு லேசுபட்ட விஷயமில்லை.   
இதேதான் இப்போதுள்ள கிரேக்கப் பிரச்னை. இந்தப் பிரச்னை ஆரம்பித்த புள்ளி ஏதோ ஒரு தூரத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டின்  பிற்பகுதியில் உள்ளது. கிரேக்க நாடுதான், யூரோ சோனில் ( யூரோ நாடுகள் கொண்ட குழுமம்) உள்ள நான்கு அரசுக் கடன் பிரச்னையில் அடி வாங்கிய முதல் நாடு.

இந்தப் பிரச்சனையின் அடிப்படை காரணம் என்ன? கிரேக்கப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம், 'பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட் வீக்கு' கதை போலதான். இதுதான் முதல் காரணம். இதன் அடுத்த கட்டமாக அதிக பற்றாக்குறை. அதற்கு அடுத்தது, கடன் தொகை மொத்த GDP விகித்தைத்  தாண்டி, உச்சாணிக் கொம்பில் இருப்பது.

நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒரு சுழற்சி. ஒரே ஒரு புள்ளியில் தொடங்கி, ஒரு வட்டமாக பெருகி, பின் அந்தப் புள்ளியிலேயே  பல கட்டங்கள் தாண்டி வந்து நிற்கக் கூடியது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல், கிரேக்க அரசாங்கம் கொடுத்த தவறான புள்ளி விபரங்களும் சேர்ந்து கொண்டது.

ஆக எல்லாமுமாக சேர்ந்து கிரீஸ் நாட்டின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட ஏதுவாகிற்று. கடனுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை விட,  ரிஸ்க் இன்சூரன்ஸ் விகிதம் ஏற்றம் கண்டு,  2012 ல் பெற்ற நாட்டுக் கடன் திருப்பித்தர முடியாமல் முடக்கப்பட்டது.
ஆக கிரேக்க அரசாங்கத்தில் மூன்று மந்த நிலமை ( ரிஸஷன்) காலகட்டங்கள் ஏற்பட்டன.கடந்த  2007 நான்காம் காலாண்டு, 2008 இரண்டாம் காலாண்டு,  2009 முதலாம் காலாண்டு, 2009 மூன்றாம் காலாண்டு தொடங்கி இன்றுவரை.....அரசாங்கத்தின் கடன் பத்திரங்கள் ஜங்க் பாண்ட் ( விலையில்லா பத்திரம்) என்று நிர்ணயிக்கப்பட்டதால், அரசாங்கத்தால் கடன் வாங்கவும் முடியாமல் போனது.

யுரோப்பியன் கமிஷன், இசிபி மற்றும் ஐம்ஃப் (Troika ) என்று கூறப்படும் மூன்று நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்து மே 2010 முதல் ஜூன் 2013 வரை கிரேக்க அரசாங்கத்திற்க்கு தேவையான பணம் 110 மில்லியன் யூரோ வை,  அரசாங்கத்தை பற்றாக்குறையில் இருந்து காப்பாற்ற சில விதிகளுக்கு உட்பட்டு கொடுத்தது. இந்த விதிகளில் மிக முக்கியம் வாய்ந்தது – நாட்டின் சொத்துக்கள் தனியார் மயம் ஆக்கப்படுவது, அரசாங்க செலவுகளை இழுத்துப் பிடித்து ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது, மற்றும் நாட்டின் அமைப்பில் சில மாறுதல்கள் கொண்டு வருவது என்பதே.
ஆனால் ஒரு வருடத்திற்குப்பின் இந்த விதிகள் மிகவும் மந்த கதியில் நடைமுறைக்கு வந்ததால்,  வேறு வழியில்லாமல் மற்றுமொரு தவணையாக 130 பில்லியன் யூரோ கொடுக்கப்பட்டது. இப்போது விதிக்கப்பட்ட மற்றுமொரு விதி அரசாங்கத்திற்கு கடன் கொடுத்த தனியார்கள் வட்டி விகிதத்தை குறைத்தும், கொடுத்த பணத்தில் 53.5% தள்ளுபடி செய்தும், காலகெடுக்கள் தள்ளிவைக்கப்பட்டும் – இவை ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகே பணம் கொடுக்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக 2015 ஜனவரியிலிருந்து 2016 மார்ச் வரை மற்றும் 8.2 பில்லியன் யூரோ கொடுப்பதாகவும் சொல்லப்பட்டது. 

இதற்கிடையில் கிரேக்க அரசாங்கம் 2013-2014 க்கான வளர்ச்சி பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிட்டது. இதில் வேலையில்லா விகிதம் மிகவும் குறைவடைந்து,  பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு... இன்னும் என்ன என்னவோ வளர்ச்சி புகழ் பாடப்பட்டு, அரசாங்கம் மறுபடியும் வளர்ச்சிப் பாதைக்கு வந்துவிட்டதுபோல் காட்டப்பட்டது. இதற்காகவே காத்திருந்தாற்போல் தனியார் நிறுவனங்கள் கடன் பத்திரங்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு பணம் கொடுக்க தொடங்கின.

இதற்கிடையில் 2014 வாக்கெடுப்பில் பதவிக்கு வந்த Syriza அரசாங்கம் இந்த TROIKA நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள மறுத்தது. கோபம் கொண்ட TROIKA , கொடுப்பதாக சொன்ன பட்டுவாடாக்களை நிறுத்திக்கொண்டது.

Alexis Tsipras, நாட்டின் தற்போதைய தலைவர். இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.ஆரம்பம் முதலே நிபந்தனைகளை எதிர்த்து வந்த இவர், "இதைப்பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் வரும் முடிவே அரசாங்கத்தின் முடிவு" என்று அறிவித்தார். இந்த வாக்கெடுப்பு (referendum) ஜூலை 5 ல் நடைபெற்றது. இதன் முடிவை கடைசியில் பார்ப்போம்.

இந்தப் பிரச்னையின் ஆரம்பம் கிரேக்க அரசாங்கம் வாங்கிய கடன். அதற்காகப் போடப்பட்ட நிபந்தனைகள். அரசாங்கம் தன் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இது எப்படி சாத்தியம்? இப்படித்தான்...

வேலை வாய்ப்பு பாதியாகக் குறைக்கப்பட்டது. சம்பளம் பாதிக்குப் பாதியாயிற்று. திட்டங்கள் முடக்கப்பட்டன. இவை எல்லாம் சேர்ந்து பணப் புழக்கத்தை குறைக்க, அது நுகர்வோர் தேவையை சாய்த்துப் போட்டது. இதனால் உற்பத்தி அடி வாங்கியது. ஆகவே அரசாங்கத்திற்கு வர வேண்டிய வரிகள் குறைந்து போயின. மொத்தத்தில் கிரேக்க அரசாங்கத்தின் நிலைமை மோசமாகி என்றுமில்லாத அளவுக்கு Debt to GDP Ratio 146% (2010) ஆக உயர்ந்தது. 

இந்த வேதனையை கூட்டியது யூரோ சோன் மெம்பர்ஷிப். 15 வருடங்களுக்கு முன் single currency group ஆக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் கிரீசும் ஒரு உறுப்பினர். ஒரே கரன்சி என்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் வளர்ச்சி, எழுச்சி என்பதற்கும் கரன்சிக்குமான தொடர்பு விட்டுப் போயிற்று. அதனால் அந்த நாடு தன் கரன்சியை devalue செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது போயிற்று. பண மாற்றம் யூரோவில் நடப்பதால், நாடுகளுக்குள் ஏற்றுமதி இறக்குமதி குறைக்கப்பட்டு, ஏற்கெனவே இருக்கும் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம், உணவுத் தட்டுப்பாடு, வங்கிகளில் போட்ட பணம் எடுக்கமுடியாதது, பங்கு சந்தை வீழ்ச்சி இப்படியாக பல பல பிரச்னைகள் பெருகிப் போயுள்ளன. 

இதுதான் கிரேக்க நாட்டுப் பிரச்னை. சரி, இது எந்த அளவு நம்மைப் பாதிக்கும்?

முதலிலேயே சொன்னபடி நாம் வேடிக்கை பார்க்கிறோம்.அவ்வளவே. இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் கிரேக்க நாட்டில் குடியிருக்கும் இந்தியர்கள் இந்தத் துயரத்தைத் தாங்க வேண்டியிருக்கும். இப்போதே அங்கே கிரெடிட் கார்டு வாங்க மறுக்கிறார்கள். ஏற்கெனவே இவர்கள் வாங்கி வைத்துள்ள பொருட்களை ஸ்டாக் இருக்கும் வரை ஓட்டலாம். புதிய இறக்குமதிக்கு அனுமதி இல்லை. வங்கிகளில்  போடப்பட்டுள்ள பணமும் முடக்கப்பட்டுள்ளது. ரேஷன் போல வாரத்துக்கு ஒரு முறை பணம் எடுக்கலாம். அதுவும் கொஞ்ச நாட்களுக்கே. அதற்குப்பிறகு...?

தற்போது ஐரோப்பிய மத்திய வங்கி ,கிரீஸ்நாடு தன்னிடம் வாங்கிய 350 கோடி யூரோ கடன் தொகையை வருகிற 20 ஆம்  தேதிக்குள் செலுத்த வேண்டும் என கெடு விதித்துள்ளது. அதன்படி கடன் தொகையை கிரீஸ் செலுத்தா விட்டால் அவசர கால கடன் உதவியை ஐரோப்பிய மத்திய வங்கி முற்றிலும் நிறுத்திவிடும் சூழல் தவிர்க்க இயலாது போய்விடும்.

கடன் சுமை காரணமாக கிரீஸ் வங்கிகள் பணமின்றி மிகவும் சிரமப்படுகின்றன. இந்த நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி, அவசர கால கடன் வழங்குவதை நிறுத்தி விட்டால் கிரீஸ் வங்கிகள் அனைத்தும் முற்றிலும் தனது செயல்பாட்டை இழந்துவிடும்.

எனவே, இன்று (செவ்வாய்க் கிழமை) ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவே கிரீஸ் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 60%க்கும் மேலான வாக்குகள், நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளன. அப்படி என்றால் அரசாங்கத்துக்கு பணம் கிடைப்பது சிரமமே. ஆக கிரேக்க நாடு IMFக்குப்பணம் கொடுக்க முடியாமல் தவறிழைக்கப் போகிறது. யூரோ உறுப்பினர் அந்தஸ்தும் பறிபோகக்கூடும்...

மொத்தத்தில் நாட்டிற்கும் வீட்டிற்கும் கடன் ஒரு தொல்லையே....!

No comments:

Post a Comment