சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Jul 2015

அரசின் மதுக்கொள்கையில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

அரசின் மதுக்கொள்கையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என மதுவிலக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பொதுமக்கள் ஆரோக்கியத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், அந்த சட்டத்தின்படி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் ஆரோக்கியம் சீரழிவதோடு, பல குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், ''தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். சமீபத்தில் கூட, சிறுவன் ஒருவனுக்கு உறவினர்களே மது கொடுத்த சம்பவம் வாட்ஸ் அப்பில் வெளியானது. இதையடுத்து, மது கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறது. இந்த மதுவால் தற்போது பச்சிளம் குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என வாதிட்டார்.


இதையடுத்து, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, ''தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் கடந்த 2003ஆம் ஆண்டு 7,800 மதுபானக் கடைகள் நடத்தப்பட்டது. தற்போது ஆயிரம் கடைகள் மூடப்பட்டு, 6,800 கடைகள் மட்டுமே இயங்குகிறது. ஆரம்பத்தில் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை மதுபானக்கடை இயங்கியது. தற்போது, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்குகிறது. மேலும், மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று ஒவ்வொரு மதுபானக் கடைகள் முன்பும் பெரிய அளவில் வாசகம் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறுவன் மதுபானம் குடிப்பது போன்ற காட்சி வெளியானது. அந்த காட்சி மதுபானக் கடைகளில் எடுக்கப்படவில்லை. அவர்கள் மதுவை வீட்டிற்கு வாங்கிச் சென்று சிறுவனுக்கு கொடுத்திருக்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், ''தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது.

மதுவின் கொடுமை குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தான் மதுவின் தாக்கத்தை பொதுமக்களிடம் குறைக்க முடியும். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்'' என உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment