சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2015

தயவு செய்து உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்: ஜெ. மீது அக்கறை காட்டும் கருணாநிதி!

ஓய்வெடுத்து உடல்நலத்தை பாருங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை,  தி.மு.க. தலைவர் கருணாநிதி அக்கறையுடன் கேட்டுக் கொண்டு உள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் என்று கூறி, அவரை பாராட்டும் வகையில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆலந்தூரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு ஏற்புரை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, ''இதுவரையில், ஒரு அருமையான, எண்ணிப்பார்க்கத்தக்க கருத்தை உரையாக தொகுத்து கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசினார்கள். நான் இந்த விஷயத்தில் அதிகம் தெரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அண்ணா இருந்தபோது, தி.மு.க. பொதுக்கூட்டங்களில் தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை விளக்கி கூறுவார். பொதுக்கூட்டங்களை மாலை நேர கல்லூரிகள் என்று அவர் கூறுவார். அதுபோன்ற கூட்டமாக இதை நான் கருதுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அறிந்து இன்று அனுபவப்பூர்வமாக மெட்ரோ ரயிலில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். இதற்கு யார் காரணம்? என்பதை எடுத்துரைக்கவே தி.மு.க. சார்பில் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில், மக்களுக்கான திட்டங்கள் தொடங்கப்படுவது வழக்கமான ஒன்று. தேர்தல் அறிக்கையில் கூறியதை முழுவதும் நிகழ்த்தி காட்டிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வை வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று மார்தட்டி கொண்டால் முதலில் தட்டிப்பார்க்க வேண்டியது மக்களின் நெஞ்சங்களைத் தான்.

அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் படும் வேதனைகளை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக இருக்க வேண்டும். ஆனால், நடைபெற்று கொண்டிருக்கும் அரசு, மக்களை பாதுகாக்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி சில-பல ஆண்டுகள் நடந்துள்ளது. அப்போது, இந்தியாவில் இல்லாத அளவு, உலக நாடுகளில் இல்லாத அளவு அண்ணா பெயரில் ஒரு பெரிய நூலகம் சென்னையில் கட்டப்பட்டது. அதன் இன்றைய கதி என்ன? இன்று தமிழகத்தின் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு நூலகமும் பயன்படவில்லை. இருக்கும் நூலகங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அண்ணா, பெரியார், அம்பேத்கர் பெயரில் இருந்தாலும் பயனற்ற நிலையில் ஆக்குகிறார்கள்.

மெட்ரோ ரயில் திட்டம் என்பதை கண்டுபிடித்ததே நாங்கள்தான் என்று ஜெயலலிதா கூறியதாக பத்திரிகையில் படித்தேன். இந்த பெருமை யாருக்கு சொந்தம்? என்பதை சிந்தித்து பார்க்க உங்களிடமே விட்டுவிடுகிறேன். மக்களுக்கான திட்டங்களை அரசு நிறைவேற்றினால் நானே நன்றி பாராட்டுவேன்.

அந்த அம்மாவை நான் வீட்டுக்கு போங்கள் என்று சொல்லவில்லை. தயவு செய்து நீங்கள் (ஜெயலலிதா) ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக் கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே முதலமைச்சர் இல்லாத மாநிலம் தமிழ்நாடுதான். அவருக்கு வேலை இல்லை. வேலை செய்ய உடல்நலம் இல்லை. அதனால் எந்த திட்டமும் தொடங்கப்படவில்லை. அவரிடம் ஓ.பன்னீர் செல்வம் படாதபாடுபடுகிறார்.

இந்த ஆட்சியில் ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’, என்று அவர் இருக்கிறார். அவர் மீது பரிதாபப்பட்டுதான் நான் இங்கு பேசுகிறேன். என்னை அவர் தனியாக பார்த்தால், ஓ... வென்று அழுதுவிடுவார் என நினைக்கின்றேன். அவர்களை கேலி செய்ய இவ்வாறு கூறவில்லை. அவர்கள் திருந்தி, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற பாடுபடவேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கவில்லை. காட்சிதான் நடக்கிறது. எவ்வளவு நாள் தான் பார்த்துக் கொண்டு இருக்கமுடியும்? தி.மு.க. ஆட்சியில் தான் மெட்ரோ ரயில் திட்டம் வந்தது. விலைவாசி குறைந்தது. ஏழை-எளிய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த எல்லாவற்றையும் மறந்து, நீங்கள் (அ.தி.மு.க.) நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது.

இது நன்றி அறிவிப்பு கூட்டம். பொதுமக்களாகிய நீங்கள் நன்றி உடையவர்கள் என்றால், எங்களை எத்தனை முறைதான் ஏமாற்றுவீர்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்களும் காத்திருக்கிறோம். உங்களை ஒருபோதும் நாங்கள் கைவிடப்போவதில்லை. நீங்கள் எங்களை தண்டித்தது போதும். நீங்கள், உங்களை அ.தி.மு.க.விடம் இருந்து விடுவித்துக்கொள்ளுங்கள். மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைய எங்களை பயன்படுத்திகொள்ள வேண்டும்" என்றார்.No comments:

Post a Comment