சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jul 2015

பேபி - படம் எப்படி?

பழிவாங்குதல், நயவஞ்சகம், ரத்தத்துக்கு ரத்தம், கொடூரக் கொலை இவையெல்லாம் பேய்ப் படங்களின் முக்கிய மூலக்கூறுகள். இந்த மூலக்கூறுகளே இல்லாமல்  வெளியாகியிருக்கும் பேய்ப் படம் தான் பேபி!
கணவன், மனைவியாக மனோஜ், ஷிரா. இருவருக்கும் அழகான இரண்டு குழந்தைகள். ஆளுக்கொரு குழந்தையுடன் வேறு வேறு வீட்டில் பிரிந்து வாழ்கிறார்கள். தனியான அபார்ட்மெண்டில் குழந்தையுடன் இருக்கிறார் ஷிரா. அவரிடம் இருக்கும் பேபி ஸ்ரீவர்ஷினிக்கு அவ்வப்போது ஒரு அமானுஷ்ய குரல் அவளை அழைப்பது கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீவர்ஷினி அந்த குரலுக்கு தோழியாகிறாள். இதற்கிடையில் ஷிராவிடம் இருக்கும் குழந்தை மனோஜ் மாதிரியோ அல்லது ஷிரா மாதிரியோ இல்லையே என்றவுடன் டிஎன்ஏ டெஸ்ட் கொடுக்கிறார் ஷிரா. டெஸ்ட்டில் இருவருக்கும் பொருந்தாமல் போகிறது. இடிந்து போகும் ஷிரா மனோஜிடம் சண்டையிடுகிறார். பிறகு ஃப்ளாஷ்பேக். ஃப்ளாஷ்பேக்கில் இவர்கள் இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்ற காரணமும் நமக்கு தெரிகிறது. பின்னர் ஷிரா கணவனை புரிந்துகொள்ள, இருவரும் ஒன்று சேர்ந்து குடும்பமாக அபார்ட்மெண்டுக்கு வர பேயின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.

புதிதாக வரும் இன்னொரு குழந்தையான பேபி சாதன்யாவை அதிகமாகவே இடைஞ்சலுக்கு ஆளாக்கி மீண்டும் குடும்பத்தை பிரிக்கிறது பேய். யார் இந்தப் பேய்?, ஏன் இதெல்லாம்? எப்படி குடும்பம் தப்பித்தது? என்பது திகில் பேய் க்ளைமாக்ஸ்..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மனோஜ். ஒரு அப்பாவாக, சொந்தக் குழந்தையா, இல்லை வளர்த்த குழந்தையா எனப் போராடும் தருணம், பயந்து நடுங்கி வீட்டில் பேப்பரை ஒட்டிக் கொண்டிருக்கும் குழந்தையிடம் இந்த பேப்பரை எங்க ஒட்டப் போற பாப்பா என கேட்டுவிட்டு குழந்தையுடன் நடக்கும் காட்சிகளில் கைதட்டலே விழுகிறது. இடையில் மனைவியின் புரிந்துகொள்ளாமை என தவிக்கும் அப்பா பாத்திரத்தில் பேக் டு ஃபார்ம். ஹீரோ என்பதைவிட குணச்சித்திர நடிகராக நடித்தால் மனோஜ் மீண்டும் நடிப்பில் களம் இறங்கலாம். புதுமுக நடிகை ஷிரா , கணவனை உதாசினப்படுத்துதல், நேருக்கு நேர் பேயைப் பார்த்துவிட்டு குழந்தையுடன் அலறித் துடித்து ஓடுவது , இரண்டு குழந்தைகளையும் திருப்திப் படுத்தத் தவிப்பது என நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற நடிகர்களான டாக்டர், ஃபாதர், என அனைவரும் தேமே என வருகிறார்கள்.
இவர்கள் அனைவரையும் வந்து பாருங்க என்கிற பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைக்கிறார்கள் பேபிகள் ஸ்ரீவர்ஷினி மற்றும் சாதன்யா. ஸ்ரீவர்ஷினி தனக்கு போட்டியாக ஒருத்தியா என முறைப்பதும், அவளை சீண்டிவிட்டு விளையாடுவதும், என கண்களில் கபடி ஆடுகிறார். அடுத்தவர் சாதன்யா தன் கண்முன்னே கண்ணாமூச்சி காட்டும் பேயைக் கண்டு நடுங்கி கண்ணாடி டிவி, என பேப்பர்களை பயந்து பயந்து ஒட்டுவதும்,  மிரட்சியை வெளிப்படுத்தி அலறுவதும், அழுவதும், அஞ்சி நடுங்கி சின்ன சமையலறை கப்போர்டுக்குள் அமர்வதுமாய் இப்படி இரண்டு குழந்தைகளின் கண்களிலும் நடிப்புகள் சொட்ட, அள்ளுகிறார்கள்.
பேயாக வரும் அஞ்சலி ராவோ , எங்கே பிடித்தீர்கள் இந்தப்பெண்ணை? வித்தியாசமான முகத்தோற்றம், என்றாலும் வந்து நிற்பதைத் தவிர்த்து பெரிய வேலை இல்லை.உன் ஜாடையில் குழந்தை இல்லையே என எந்தத் தோழி கேட்பார், கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். அந்தக் காட்சிக்கு மேலும் யோசித்திருக்கலாம். பேயின் மேக்கப்புகளும் கொஞ்சம் புதிதாக இல்லாமல் க்ரட்ஜ் பேயை ஞாபகப்படுத்தும் வெள்ளை உடை, தலைவிரிகோலம், முடிக்கு நடுவில் இருக்கும் ஒற்றைக் கண்  என வழக்கம்போலவே இருக்கிறது, அதை மாற்றியிருக்கலாம்.
குழந்தைகளைக் குறிவைத்த பேய்ப் படம் என்றவுடன் ஹாலிவுட் பாணியில் தனியறையில் தூங்குவது, கப்போர்டுக்குள் கள்ளச்சிரிப்பு காட்டும் பேய், வீட்டிற்கு கீழ் உள்ள பழைய சாமான் அறை  இதெல்லாம் இல்லாமல் ஒரு பேய்ப் படம் கொடுத்ததற்கே முதலில் பாராட்ட வேண்டும் இயக்குநர் சுரேஷை. அதிலும் பழிவாங்கல், கொலை, ரத்தம் என இல்லாமல் உண்மையில் நம்மைச் சுற்றிவரும் இறந்து போன ஆத்மாக்கள் பொதுவாக என்ன செய்வார்களோ அதை காண்பித்திருக்கிறார்.
பேய்ப் படமென்றால் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கொஞ்சம் முக்கியம். சதீஷ் ஹாரிஷ் பின்னணி, சின்னச் சின்ன ஓசைகளுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்தவிதம் அருமை. உதாரணத்திற்கு பேப்பர் சத்தம், லிஃப்ட், வரையும் பென்சில் சத்தம் என நல்ல மெனக்கெடல். பாடல்கள் மனதில் அவ்வளவாக நிற்கவில்லை.அபார்ட்மெண்ட் காட்சிகளிலும், குழந்தைகளின் உணர்வுகளைக் காட்டும் இடத்திலும் ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு ரசிக்கச் செய்கிறது.
சில காட்சிகள் கொஞ்சம் நீளமாக இருப்பது தெரிகிறது அதை குறைத்திருக்கலாம். வாரம் ஒரு பேய்ப் படம் வருகிறது. அந்த வகையில் மற்ற பேய்ப் படங்கள் போல் அரற்றி உருட்டி மிரட்டி கடைசியில் காமெடியாக்காமால் உண்மையில் வீட்டுக்குள் ஒரு ஆவி இருந்தால் ஒரு குடும்பத்தில் என்ன உணர்வுகள்  இருக்குமோ அதை அப்படியே காட்டிய விதத்திற்கு பாராட்டுகள்.
கொஞ்சம் பொறுமையாக பார்க்க வேண்டிய படம். சிறுகுழந்தையானாலும், ஏன் செத்தாலும் சரி நாம் செய்யும் சிறு தவறுக்கும் தண்டனை உண்டு என்பதை பொறுமையான திகில் அனுபவத்துடன் காட்டி, தீதும் நன்றும் பிறர்தர வாரா என வணக்கம் வைத்திருக்கிறாள் இந்த பேபி.




No comments:

Post a Comment