சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2015

அடம்பிடிக்கும் ஆளுங்கட்சி... விரயமாகும் மக்கள் பணம்! உடன்குடி மின் திட்டத்தில் நடப்பது என்ன?

வறட்டுப் பிடிவாதத்தால் மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணாகிறது என்பதற்கு உடன்குடி மின் திட்டம் ஓர் உதாரணம்.
‘தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவதே எனது முதல் வேலை’ என்று வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார் ஜெயலலிதா. ஆனால், அவர் தலைமையில் இயங்கும் தமிழக அரசாங்கத்தால், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டத்துக்கான டெண்டரைக்கூட விட முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.   
அதற்கு அத்தாட்சியாக உடன்குடி அனல் மின்திட்ட விவகாரத்தில் அந்த அளவுக்கு நீதிமன்றத்தில் மூக்குடைபட்டுக் கொண்டே இருக்கிறது தமிழக அரசு. ஒவ்வொரு முறையும் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் குட்டுப்படும் அரசாங்கம், டெண்டரில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவோ, தவறுகளைத் திருத்தவோ எந்த முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இந்தப் பிடிவாத திட்டம் மக்களுக்கானதா? இல்லை தனிப்பட்ட சிலரின் லாபத்துக்காகவா என்ற கேள்விகளை முன் வைக்கிறது.
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகப் போடப்பட்ட உடன்குடி அனல் மின் திட்டம், குறைந்த எரிபொருள் அதிக மின்சாரம் என்ற இலக்கை நிர்ணயித்துச் செயல்படும் ‘சூப்பர் கிரிட்டிக்கல்’ தொழில்நுட்ப வகையைச் சேர்ந்தது. 
 
இந்தத் திட்டம்கூட கடந்த தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டது. பெல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு இதை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளளப்பட்டது. அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க போய், அ.தி.மு.க வந்ததும், புதிய தலைமைச் செயலகம்... அண்ணா நூலகம் வரிசையில், பெல் நிறுவனத்தோடு போடப்பட்டு இருந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அதை ரத்துசெய்த ஜெயலலிதா, தமிழக மின்வாரியமே இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் என்று பெருமிதத்தோடு அறிவித்தார். இடையில் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்காக, பெல் நிறுவனத்துக்கு 50 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகவும் தமிழக அரசால் கொடுக்கப்பட்டது. 2013, ஏப்ரல் 7-ம் தேதி இந்தத் திட்டத்துக்காக டெண்டர் விடப்பட்டது. அப்போது தொடங்கிய குழப்பம் இன்னும் தொடர்கிறது.

உடன்குடி அனல் மின் திட்டத்துக்காக தமிழ்நாடு மின்வாரியம் விட்ட டெண்டர் வகை, ‘டெப்ட் கம் இபிசி (DEBT cum EPC)’ வகையைச் சேர்ந்தது. இந்த வகை டெண்டரில் பங்குகொள்ளும் நிறுவனம், குறைந்த வட்டி விகிதத்தில், திட்டத்துக்கு செலவாகும் தொகையைக் கடனாகப் பெற்றுத் தர வேண்டும். டெண்டர் எடுக்கும் நிறுவனம்தான் கடன் வாங்கித் தருவதற்கும் பொறுப்பு. மீதித் தொகையை அரசாங்கம் கொடுக்கும். திட்டம் நிறைவேற்றப்பட்டதும் கிடைக்கும் மின்சாரம் அரசாங்கத்துக்கு. மின்சாரத்தை விற்பதால் கிடைக்கும் லாபம் டெண்டர் எடுத்த நிறுவனத்துக்கு. அந்தத் தொகையில், எப்போது, திட்டத்துக்கான கடன் கழிந்து, நிறுவனம் செய்த முதலீடும் கிடைத்துவிடுகிறதோ அப்போது டெண்டர் எடுத்த நிறுவனம் அனல் மின் நிலையத்தை தமிழக மின்வாரியத்திடம் ஒப்படைத்துவிடும். அதன்பின் அதன் ஏகபோக உரிமை அரசாங்கத்துக்குக் கிடைக்கும்.
இப்படிப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு இந்த டெண்டரைக் கைப்பற்ற, சீன அரசுக்குச் சொந்தமான ‘தெற்கு சீன மின்சக்தி வடிவமைப்பு நிறுவனம்’ என்ற நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்ட ‘FKS’ என்ற இந்திய நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, மத்திய அரசின் பி.ஹெச்.இ.எல் நிறுவனமும் டெண்டரைக் கைப்பற்றும் போட்டியில் குதித்தன.
அதிகக் கடன் தொகை, குறைந்த வட்டி, திட்டத்தைச் செயல்படுத்தும் காலம் என்று எந்த வகையில் பார்த்தாலும், டெண்டர் விதிமுறைகளை சீன நிறுவனம்தான் கூடுதலாகப் பூர்த்தி செய்திருந்தது. இந்த நேரத்தில்தான், எந்த முன்னறிவிப்பும் இன்றி 2015, மார்ச் - 13 அன்று தமிழக அரசு டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்தது. தமிழக அரசின் தான்தோன்றித்தனமாக இந்த ரகசிய நடவடிக்கையை தனது அறிக்கையில், கேள்விக்குள்ளாக்கிய தி.மு.க தலைவர் கருணாநிதி, “டெண்டர் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து அதை ரத்து செய்தது ஏன்? விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்து ரத்து செய்தது ஏன்? வழக்கமாக மின் வாரிய அலுவலகத்தில் நடக்கும் கூட்டம், இந்த முறை மட்டும் தலைமைச் செயலகத்தில் நடந்தது ஏன்? சீன நிறுவனத்தோடு பேரம் படியவில்லையா? அதனால், 10 பைசா பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்து செய்யச் சொன்னது மேலிடத்தின் உத்தரவா?” என்று தமிழக அரசைக் கிழித்தெடுத்தார்.
இதையடுத்து, டெண்டர் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தமிழக அரசின் மின்வாரியம், உடன்குடி அனல் மின் திட்டம் தொடர்பாக புதிய டெண்டரை அறிவித்தது. சீன நிறுவனம் அதற்கும் தடை கேட்டு, மற்றொரு வழக்கையும் தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்யநாராயணா, இந்த விவகாரத்தில் டெண்டர் விடுவதற்கு மட்டும் 33 லட்சத்து 42 ஆயிரத்து 864 ரூபாய் செலவாகி உள்ளது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளபடி, ‘அரசாங்கம் என்பது நேர்மையாகவும் சமமாகவும் நடந்துகொள்ள வேண்டும். நேர்மைக்கும் பாரபட்சமற்ற தன்மைக்கும் எதிராக நடந்துகொள்வது அரசியல் அமைப்பின் 14-வது பிரிவு சுட்டிக்காட்டும் சம உரிமை என்ற கருத்துக்கு எதிரானதாகும். சீன நிறுவனத்தின் விலைப்புள்ளியை நிராகரித்தபோது, அதற்கு மின் வாரியம் சொன்ன காரணம், சீன நிறுவனம் டெண்டர் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என, அதன் புள்ளிகளை ஆய்வுசெய்த பிக்ட்னர் நிறுவனம் அளித்த கருத்தின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது என்று சொன்னது. ஆனால், ஆவணங்களைப் பரிசீலித்ததில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. மாறாக சில திருத்தங்களைச் செய்யலாம் என்று மட்டுமே அதில் சொல்லப்பட்டுள்ளது.
புதிதாக டெண்டர் விடுவதால், நேரமும் பணமும் அதிகம் செலவாகும். தவிர திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஆகும். அதில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிறுவனம், இதுபோன்ற இழப்புகளையும் நஷ்டத்தையும் கருத்தில்கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும். ஆனால், இந்தப் பிரச்னையில் கவனத்துடன் அரசாங்கம் செயல்படவில்லை. எனவே, 2015, மார்ச் 26-ல் வெளியிடப்பட்ட புதிய டெண்டர் மீது வாரியம் மேல் நடவடிக்கை எதையும் எடுக்கக் கூடாது’’ என்று இந்த நீதிமன்றம் தடை விதிக்கிறது என்று உத்தரவிட்டார்.
கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் பணத்தை வீம்பு விரயம் செய்யும் ஆளும் கட்சியின் போக்கு மாற வேண்டும்.No comments:

Post a Comment