சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jul 2015

அன்பில் மகேஷின் கிடு கிடு வளர்ச்சி... கிறுகிறுக்கும் திருச்சி திமுகவினர்!

திமுகவின் மாநில இளைஞரணி  துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாட்டி ஜெயலட்சுமி இறப்பு நிகழ்ச்சிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக நிர்வாகிகள் திரண்டது, திமுகவில் அவர் அவர் கரம் வலுப்பட்டு வருவதை உணர்த்துவதாக உள்ளதாக உள்ளுர் திமுகவினர் ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர்.
திமுகவின் மாநில இளைஞரணி  துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பாட்டி ஜெய லட்சுமி. இவர் கடந்த ஆறாம் தேதி மரணமடைந்தார். இதற்கு  திமுக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பிலும் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டபட்டன. இன்று நடந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு முழுக்க இருந்து முக்கியமான திமுக  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம் கருணாநிதியின் அத்யந்த நண்பர்களில் முக்கியமானவர். இவரது மகன் அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். ஆனால் இளம் வயதிலேயே அவர் இறந்தார். அவரது மகனான அன்பில் மகேஷ் அந்த வரிசையில் நடிகர் உதயநிதியின் நண்பராக இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் அகில இந்திய ரசிகர் (?) மன்றத்தை கவனித்துக் கொண்ட மகேஷ், சில மாதங்களுக்கு முன்புதான் திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கட்சியில் அவருக்கு முன் சீனியர்கள் பலர் உள்ள நிலையில், கருணாநிதியின் குடும்ப நண்பரின் வாரிசு என்பதால் மகேசுக்கு கிடைத்த பதவி பலரையும் எரிச்சலடைய வைத்தது. ஆனால் கட்சியில் பதவி பெற்ற மகேஷை பாராட்டி அவரது நண்பர்கள் வைத்த பேனர்கள் கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளுக்கு அருகிலேயே வைக்கப்பட்டதிலிருந்து அவருக்கான முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட கட்சியினர் கப்சிப் ஆனார்கள். தங்கள் கட்சியின் வழக்கப்படி அவரிடம் நெருங்க ஆரம்பித்தார்கள். அவர் படுப்பது, தூங்குவது தவிர மற்ற எல்லா விஷயங்களுக்கும் இளைஞரணியினர் போஸ்டர் அடித்து புல்லரிக்க வைத்தனர். அதுவரை கட்சி ஈடுபாடு இல்லாமல் இருந்த மகேஷ், பின்பு கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டினார். 

இந்த நிலையில் அவரின் பாட்டி இறப்புக்கு, ஸ்டாலின் வீட்டு குடும்பத்திற்கு தரும் முக்கியத்துவத்திற்கு ஈடாக மதிப்பளித்து கட்சியினர் தமிழகம் முழுவதிலிமிருந்தும் நேற்று திரண்டனர். கட்சியினர் அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தால் அவருக்கு திமுகவில் பெரிய எதிர்காலம் இருப்பதாக கருதுகின்றனர் திமுகவினர். அதனால் அவருடன் சுமூகமான நட்பில் இருப்பது தங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது என்கிறார்கள்.
இது குறித்து பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர், “ ஸ்டாலின் குடும்பத்துக்கும், அன்பில் பொய்யாமொழி குடும்பத்துக்கும் இருந்த நட்பு உலகுக்கே தெரியும். இது தலைமுறைகளை கடந்த நட்பு.  முன்பு கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கமும் நட்புடன் பழகிவந்தனர். அந்த நட்பு அவர்கள் மகன்களான ஸ்டாலின் - அன்பில் பொய்யாமொழியிடமும் தொடர்ந்தது. 

இப்போது தலைமுறைகளை தாண்டி இளைய தலைமுறையான உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை தொடர்கிறது. இவர்கள் குடும்பம் ஒரே குடும்பம் மாதிரிதான். அதனால்தான் இந்த நிகழ்வுக்கு துர்கா ஸ்டாலின்,  கிருத்திகா உதயநிதி என முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். எனவே இதற்கு தமிழக முழுவதும் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வந்ததில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை” என்றார்.
மற்றும் சிலரோ, “ஸ்டாலின் குடும்பதில் ஒருவரான அன்பில் மகேஷ்க்கு  திடீரென பெரிய பதவியை கொடுத்தார் ஸ்டாலின். அவரும் கட்சி பணிகளை சிறப்பாக செய்துவந்தார். தமிழகம் முழுக்க இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சியின் கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் என ஸ்டாலின் வந்து செய்யக் கூடிய பணிகளை எல்லாம் மகேஷ் செய்து வந்தார். கட்சி முக்கிய நிர்வாகிகள் மத்தியிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ். ஸ்டாலினிடம் நெருங்க வேண்டும் என்றால் இவரிடம் பழகினால்தான் முடியும் என கட்சி நிர்வாகிகளும் இவரை அணுக ஆரம்பித்தனர். 


வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் கைகாட்டுபவருக்குதான் சீட்டு. எனவே மகேஷிடம் பழகினால் எளிதாக சீட்டு வாங்கிவிடலாம் என இவரை தொடர ஆரம்பித்துள்ளனர். அதனால்தான் மகேஷ் பாட்டி இறந்ததுக்கு தமிழகம் முழுக்க இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் என்றனர். 

" உழைப்பு, களப்பணி, கட்சியின் மீது பற்று கொண்டவர்களை மட்டுமே அண்ணா காலத்து திமுகவில் கட்சி நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இன்றோ கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தால் பதவிக்கு வந்துவிடலாம் என்ற நிலைமை வந்துவிட்டதே"  எனக் குமுறினார் அண்ணா காலத்து திமுக தொண்டர் ஒருவர்.  


No comments:

Post a Comment