சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Apr 2015

பயம்...பயம்...தேர்தல் பயம்! யாரோடு யார்... தடுமாறும் தலைவர்கள்

தேர்வு நெருங்க நெருங்க மாணவர்களுக்கு உதறலும் உள்காய்ச்சலும் எகிறுவதைப்போல, தேர்தல் நெருங்கி வர வர, மக்கள் தலைவர்களுக்கு மனஉளைச்சலும் பெரும் பீதியும் ஏற்பட்டுவிட்டன. யாரோடு சேர்ந்தால் தன்னையும் தனது கட்சியையும் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வரமுடியாமல் திணறுவதால், எல்லா மேடைகளிலும் சிரிக்கிறார்கள்; யாரைப் பார்த்தாலும் முறைக்கிறார்கள். 'எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்பதே, எல்லா கட்சிகளின் உண்மை நிலவரம்! 
இதில் ஜெயலலிதாவை விட்டுவிட வேண்டும். அவர், நீதிமன்ற இடியாப்பச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார். பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் மேல்முறையீடு செய்துவிட்டு, விதியை நம்பிக் காத்திருக்கிறார். கர்நாடகா உயர் நீதிமன்றத் தீர்ப்புதான் அவரைக் காப்பாற்ற வேண்டும்.
ஜெயலலிதாவுக்காவது சிறை பயம். முடக்கப்பட்டு இருக்கிறார். மற்ற கட்சித் தலைவர்கள் தண்டனையே இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களைப் பயமுறுத்துவது, தேர்தலில் மக்கள் தரப்போகும் தீர்ப்பு!

ஆம், வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்குமே ஆசிட் டெஸ்ட்!
கருணாநிதி, தன் கணக்குக்கு நிதி வசூலைத் தொடங்கிவிட்டார். பொருளாளர் ஸ்டாலினே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, கோடி குவியலைத் தொடங்கிவைத்தார். ஆனால் ஏதாவது ஒரு கட்சி, அவர்களோடு போய் சேர்ந்து கூட்டணிக் குவியலைத் தொடங்கிவைக்கக் காணோம். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடத்தப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னெடுத்த 14 கட்சிப் பேரணியில் பங்கேற்க, தி.மு.க-வுக்கும் அழைப்பு விடுத்தார் சோனியா. போய்ப் பங்கேற்றார் கனிமொழி. ஆனால், அதே சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் மற்ற கட்சிகளைக் காணோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும் காணோம். அத்தகைய ஒன்றுபட்ட முயற்சியை தி.மு.க-வால் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க., நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கும் சட்டம் இது. அதில்கூட ஒன்றுபட்ட போராட்டத்தை கருணாநிதியால் ஏற்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒருமுகப்படுத்தும் சக்தியை தி.மு.க தலைமை இழந்துவிட்டதா? தி.மு.க மீதான நம்பிக்கை, இதர கட்சிகளுக்கு இல்லாமல்போய்விட்டதா? இரண்டில் எது பதிலாக இருந்தாலும், அது தி.மு.க-வுக்கு ஆபத்துதான். இரண்டு பதில்களுமே உண்மையாக இருந்தால்... பேராபத்து.

சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் கூச்சப்படாமல் கைகோப்பவர்கள்கூட, அறிவாலயத்தைப் பார்த்து அச்சப்பட்டால்... வெல்லும் குதிரைகளின் பட்டியலில் தி.மு.க இல்லை என நினைப்பதாகத்தானே பொருள்? ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி அமைத்த கூட்டமைப்பில் இருந்த ஒரே ஒரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள்கூட (மற்றவை இயக்கங்கள்!) காங்கிரஸுடன் நெருக்கம் காட்டத் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் என்றால் கசந்த தொல்.திருமாவளவனுக்கு, சமீபகாலமாக சத்தியமூர்த்தி பவன் டிபன் பிடித்துவிட்டது. 'காங்கிரஸோடு மீண்டும் கூட்டணி அமைக்க திருமாவளவன் அச்சாரம் போட்டிருக்கிறாரா?’ என ஊடகவியலாளர்கள் எழுதுவதற்கு வாய்ப்பு இருக்கலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை அப்படி அமைந்தாலும் தவறு இல்லை’ என திருமாவளவன் தீர்க்கமாகக் அறிவித்துவிட்டார். கருணாநிதி தன் வாழ்நாளில் சந்தித்த முதல் முக்கிய எதிரியான ஈ.வெ.கி.சம்பத்தின் 90-வது பிறந்த நாள் விழாவில்தான் திருமா இப்படிப் பேசினார். தன்னை தேர்தல் அரசியலுக்கு அழைத்துவந்ததே மூப்பனார்தான் என்றும் மகுடம் சூட்டி இருக்கிறார். எனவே, அவர் தனக்கான பாதையைத் தீர்மானித்துவிட்டதாகவே தெரிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளைக்கூட மனமுவந்து கொடுக்காத சூழ்நிலைதான், தி.மு.க-வைவிட்டு தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள திருமாவுக்குக் காரணமானது.
'விஜயகாந்தைப் பேசி முடித்துவிட்டோம்; அறிவாலயத்துக்கு அதோ வருகிறார், கோபாலபுரத்துக்கு இதோ வருகிறார், சி.ஐ.டி காலனிக்கு வந்துபோய்விட்டார்’ எனக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கிளப்பிய கப்சாக்களை தி.மு.க-வின் புதுச் சாதனையாளர்கள் இப்போதும் தொடங்கிவிட்டார்கள். 'அவர் 60 தொகுதிகள் கேட்கிறார். நாம் 40 தரலாம் என்கிறோம். 50-ல் முடித்துவிடுவோம்’ என அள்ளிவிடுகிறார்கள். ஆனால், நிஜம் என்ன? விஜயகாந்தின் முதல் கேள்வியே, 'யாரு சி.எம் கேண்டிடேட்?’ என்பதாகத்தான் இருக்கும். இதற்கு பதில் சொல்ல, மு.க-வும் தயாராக இல்லை; மு.க.ஸ்டாலினும் தயாராக இல்லை. அப்புறம்?
இந்த அளவில், இந்த அழகில்தான் இருக்கிறது தி.மு.க கூட்டணி முயற்சிகள். இந்த யதார்த்தம் உணர்ந்ததால்தான், 'ஆறாவது முறையும் முதலமைச்சராக எனக்கு விருப்பம் இல்லை’ என கருணாநிதி பேசியது. மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சர் ஆக முடியுமா என்பதற்கான தேர்தல் இது. அதனால்தான், அன்புமணி மகள் திருமணத்துக்குக் குடும்பத்தோடு வாழ்த்தப் போனார் ஸ்டாலின். அங்கு வந்திருந்த வைகோவையும் தேடிச்சென்று பேசப் போனார். கூட்டணி முயற்சிகளில் அவரும், அவரது குடும்பத்தினரும் மும்முரம் காட்டுகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுக் கட்சிக்காரர்கள் பங்கேற்கும் மேடைகளுக்கு வரத் தயங்கும் ஸ்டாலின், இப்போது கூச்சம் விடுத்து வரத் தயாராகிவிட்டார். அழுதாலும்... அவர்தான் பிள்ளை பெறவேண்டும்!
'கூட்டணிக்கு நான்தான் தலைமை தாங்க வேண்டும்’, 'முதலமைச்சர் வேட்பாளரும் நானே, என்னை அனைவரும் ஏற்க வேண்டும்’ என நினைக்கும் விஜயகாந்த், தன்னைத்தானே வீட்டுச் சிறையில் வைத்துக்கொண்டவர்போல் இருக்கிறார். வீரியம் இருக்கும் அளவுக்குக் காரியம் இல்லை. அவர் தலைமையை ஏற்பார் இங்கே யாரும் இல்லை. ஏற்கும் அளவுக்கு அவரும் நடந்துகொள்ளவில்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அவர் காட்டிய பம்மாத்துக்குப் பிறகும், அந்தக் கட்சி இவரை நம்புகிறது என்றால், தாமரைக்கும் வேறு கதி இல்லை என்பது புரிகிறது. பிரேமலதாவுக்கு அது வேண்டும், சுதீஷ§க்கு இது வேண்டும் எனக் கேட்டு, டெல்லிக்கு எடுத்த படையெடுப்பில் எதையுமே எடுத்துவர முடியவில்லை. கடந்த வாரத்தில் மத்திய அரசுப் பொறுப்புகள் ஒருசில தே.மு.தி.க வழக்குரைஞர்களுக்கும் தரப்பட்டுள்ளது என்பதைத் தவிர, பா.ஜ.க-வுடன் கூட்டுச் சேர்ந்ததால் எந்த மகிழ்ச்சியும் விஜயகாந்துக்கு இல்லை. ஒரு காலத்தில் மூன்றாவது அணியின் நம்பிக்கையாக அவரைப் பார்த்த இடதுசாரிகளும், தங்கள் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டார்கள். எனவே, விஜயகாந்துக்கு பா.ஜ.க-வை விட்டால் வேறு வழி இல்லை.
'ரஜினி வர்றாக, விஜய் வருவாக...’ என்ற நம்பிக்கையில் இருந்த பா.ஜ.க-வினரால், கங்கை அமரன், கஸ்தூரிராஜா வரையிலேயே எட்ட முடிந்தது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மொத்தமாக ஒரு வார்டு வாக்குகள் அளவுகூட வாங்க முடியாமல்போனதால், விஜயகாந்தை தனது வீட்டுக்குள் விடாவிட்டாலும், 'நீங்கள் எங்கள் கூட்டணிக்குள்தான் இருக்கிறீர்கள்’ என கமலாலயத்தில் எழுதிப்போடத் தயாராக இருக்கிறது பா.ஜ.க. ஆனால், தே.மு.தி.க-வினர் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்ததால் மட்டுமே, 29 பேர் சபைக்குள் போக வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் விஜயகாந்த் மட்டும்தான் போயிருக்க முடியும். மீண்டும் அப்படி ஒரு விஷப்பரீட்சை தேவையா என யோசிப்பதால்தான், விஜயகாந்தைப் போலவே செயல்படாமல், செயல்படுவதைப்போல நடிக்கவும் செய்யாமல் மாவட்டப் பொறுப்பாளர்கள் வலம்வருகிறார்கள். துணிச்சலாகச் செலவு செய்துகொண்டிருந்த பலரும் பதுங்கிவிட்டதுதான் நிஜம். தேர்தலில் போட்டியிட இவர்களில் பலர் மீண்டும் வாய்ப்பு கேட்பார்களா என்பதே சந்தேகம். இந்த யதார்த்தத்தை இதுவரை விஜயகாந்த் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பா.ஜ.க-விலும் பாதி பேர், ஜெயலலிதா, சில தொகுதிகளை ஒதுக்கிக்கொடுத்தால் போதும், அதில் தாங்கள் எம்.எல்.ஏ ஆனால் போதும் என்ற நப்பாசையில் 'கூட்டணி எல்லாம் முடிவாகிவிட்டது. ஜெட்லி பேச வந்ததே அதற்காகத்தான்’ எனத் தங்கள் ஆசையைப் பரப்பிவருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலேயே பா.ஜ.க-வினர் சிலருக்கு அந்த ஆசை இருந்தது. 'நானே பிரதமர் வேட்பாளர்’ என ஜெயலலிதா சொல்லாமல் இருந்திருந்தால், அது சாத்தியமாகி இருக்கக்கூடும்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நின்று வென்றவர்கள் இரண்டு பேர்தான் என்றாலும், கூட்டணி வாங்கிய மொத்த வாக்குகள் மோசமானது அல்ல. தி.மு.க வாங்கிய வாக்குகள் 96 லட்சம் என்றால், இந்தக் கூட்டணி வாங்கியவை 73 லட்சம். தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கூட்டணி ஒன்று இத்தனை லட்சம் வாக்குகள் வாங்கியதே தனிச் சாதனை. உருவாகிய வேகத்தில் உடைந்ததும் சாதனையே. பொருந்தாதக் கூட்டணியில் போய் பொருந்திய வைகோ, விரைவில் வருந்தி வெளியேறினார். வெளியேறியவருக்கு அடுத்து என்ன என்பது விளங்கவில்லை. தி.மு.க-வுடன் ஐக்கியம் என்பதுபோல அன்புமணி மகள் திருமணத்தில் அடையாளம் காட்டியவர் 'இப்போது தேர்தல் வைத்தாலும் ஜெயலலிதாதான் ஜெயிப்பார்’ என இங்கிலாந்துத் தூதரக அதிகாரியிடம் சொன்னதாக வெளியில் சொல்லி, அந்தப் பக்கமும் காட்டிக்கொண்டார். முல்லைப் பெரியாறு பிரச்னையில் அ.தி.மு.க-வுக்குப் பாராட்டு, மீத்தேன் பிரச்னையில் தி.மு.க-வுக்குத் திட்டு எனப் போகும் வைகோ வாகனம், எப்போது எந்தப் பக்கம் திரும்பும் என்பது ம.தி.மு.க-வினருக்கே குழப்பமாக இருக்கிறது. இரண்டில் ஒன்றைத் தொட முடியாமல், இரண்டு விரலையும் தொட்டுக்கொண்டிருக்கிறார் வைகோ.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு இருந்த நல்ல நேரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவர் ஆனது. கத்திக் கத்தியே கூட்டம் கூட்டிவிடுகிறார். அவருடைய பிரபல்யம், அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியை மையத்தில் உட்காரவைக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் நடத்தும் மேடைகளில் இளங்கோவனுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், காங்கிரஸ்தான் தமிழ்நாட்டில் இப்போது எதிர்க்கட்சி என்பதுபோல் ஆக்கிவிட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா போன்றவர்கள் தனி அணி அமைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்கிய ஜி.கே.வாசன், நாடு முழுக்க வலம்வருகிறார். பெரிய வீட்டுப் பையன் தங்களை ஆதரித்தால் நல்லது என கருணாநிதி நினைக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு கருணாநிதியை இன்னும் ஜி.கே.வாசன் சந்திக்கவே இல்லை. ஆனால், ஜெயலலிதா பிறந்த நாளுக்கு ஞானதேசிகன் பேரில் ஆஸ்திரேலியப் பூக்கள் போகின்றன. இவரும் இடதுசாரித் தலைவர்களோடு மேடை ஏறுகிறார். இந்த மேடைகள் தேர்தல் வெற்றிக்குப் பயன்படாது என்பது ஜி.கே.வாசனுக்கும் தெரியும். அதனால்தான், 'தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என ஒரு மணி நேரம் தமிழருவி மணியன் பேசிய பிறகு, அதற்குப் பதிலே சொல்லாமல், 'மணியன் நல்லவர், அன்பானவர்’ என தன் பதில் அல்லாத பதிலை மதுரையில் ஜி.கே.வாசன் வாசித்துவிட்டு வந்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதையோ செய்ய நினைக்கிறது. தேவை இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் நின்று 'செல்வாக்கை’ வெளிப்படுத்தியிருக்க வேண்டாம். உலகப் பிரச்னைகளில் ஒழுங்கான முடிவெடுத்து உள்ளூர் பிரச்னைகளில் தப்பான நிலைப்பாடுகள் எடுத்ததற்கான தண்டனையை ஒவ்வொரு தேர்தலிலும் அது அனுபவிக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு வங்கி இருந்ததோ, இல்லையோ... கொஞ்சம் நல்ல பேராவது இருந்தது. அதையும் தா.பாண்டியன் பழுதாக்கிவிட்டுப் போய்விட்டார். 'முத்தரசன் முயற்சிகள் வெல்வதாகுக’ என வாழ்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த இரண்டு கட்சிகளும் அகில இந்திய அளவிலேயே நாடாளுமன்ற அரசியல் நிலைப்பாடுகள் பயனளித்துள்ளனவா என்பதைப் பரிசீலனை செய்துவிட்டு கட்சி நடத்துவதே இனி நல்லது. இவர்களது தேர்தல் தோல்விகள், இவர்களது மூலத் தத்துவத்தின் தோல்விகளாக அடையாளம் காட்டப்படும் அவமானத்தையாவது தேடித் தராமல் இருக்கலாம்.
இப்படி அத்தனை கட்சிகளும் முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டு முழி பிதுங்கிக்கொண்டிருக்கின்றன.
வாக்காளன் சிரிக்கிறான்!


No comments:

Post a Comment